பணத்துக்காக ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிகர்கள் நடிப்பதா - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பணத்துக்காக ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிகர்கள் நடிப்பதா என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-07-01 12:23 GMT

சென்னை,

8 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பேட்மிண்டன் தொடரான 'பிக்பாஷ்' லீக் போட்டிகளை, பா.ம.க. தலைவரும், இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் துணை தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேட்மிண்டன் விளையாடினார்.

இதையடுத்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

ஆன்லைன்' விளையாட்டுக்காக தமிழக அரசு அமைத்த குழு கொடுத்த பரிந்துரை குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. உடனடியாக தமிழக அரசு இதுதொடர்பாக தங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவேண்டும்.

இந்தியாவில் உள்ள நடிகர்-நடிகைகள், பிரபலங்கள் 'ஆன்லைன்' சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களில் நடித்துக்கொண்டு வருகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நாசமாகி வருகின்றன. அது அவர்களுக்கு தெரிகிறதா? தெரியவில்லையா? என்று எனக்கு புரியவில்லை.

பணத்துக்காக என்ன விளம்பரத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாமா? தமிழகத்தில் சமீபத்தில் ஒரு பெண் உள்பட 24 இளைஞர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். மன அழுத்தத்தின் உச்சத்துக்கு 'ஆன்லைன்' விளையாட்டு தள்ளுகிறது. அது கூட தெரியாமல் பிரபலங்கள் பணத்துக்காக ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கிறார்கள்.

இது ஏற்றுக்கொள்ளமுடியாது. அதை அவர்கள் தவிர்க்கவேண்டும். நடிகர்கள் ஷாருக்கான், ரித்திக் ரோஷன், அக்சய் குமார் நடிக்கிறார்கள். நல்ல விஷயங்களுக்கு நடிக்கலாம். ஆனால் தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் சூதாட்டங்களுக்காக நடிகர்கள் நடிக்கவேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்