புலி, சிறுத்தையின் எச்சம் மூலம் டி.என்.ஏ. பரிசோதனை

வனவிலங்குகள் வேட்டையை தடுக்க புலி, சிறுத்தையின் எச்சம் மூலம் டி.என்.ஏ. பரிசோதனை செய்து, அதன் விவரங்களை சேகரிப்பது குறித்து கூடலூர் கோட்ட வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-10-12 18:45 GMT

கூடலூர், 

வனவிலங்குகள் வேட்டையை தடுக்க புலி, சிறுத்தையின் எச்சம் மூலம் டி.என்.ஏ. பரிசோதனை செய்து, அதன் விவரங்களை சேகரிப்பது குறித்து கூடலூர் கோட்ட வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வன ஊழியர்களுக்கு பயிற்சி

நீலகிரி மாவட்டம் முதுமலை, கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் வன குற்றங்கள் மற்றும் வேட்டைகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் புலி, சிறுத்தையின் எச்சங்கள் மூலம் டி.என்.ஏ. பரிசோதனை செய்து, அதன் விவரங்களை சேகரிக்க மாநிலம் முழுவதும் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இதற்கான முதல்கட்ட பயிற்சியை தமிழ்நாடு வனத்துறை உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் (ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வி) குழுவினர் வன ஊழியர்களுக்கு நடத்தி வருகின்றனர். கூடலூர் கோட்டத்தில் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் மேற்பார்வையில் ஓவேலி வனச்சரகம் பார்வுட் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

டி.என்.ஏ. பரிசோதனை

இதற்கு வனச்சரகர் யுவராஜ் தலைமை தாங்கினார். ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வி குழுவினர் வன ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- புலியின் உடலில் உள்ள வரை கோடுகள் மூலம் அடையாளம் காண முடியும். ஆனால் சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகள் மூலம் எளிதில் அடையாளம் காண முடியாது. இதனால் எச்சங்கள் மூலம் டி.என்.ஏ. பரிசோதனை செய்து அதன் விவரங்களை சேகரித்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் வேட்டையாடப்பட்டு குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் புலியின் உடற்பாகங்களை டி.என்.ஏ. பரிசோதனை செய்வதன் மூலம் எந்தப் பகுதியில் இருந்து வேட்டையாடப்பட்டது என எளிதில் கண்டுபிடிக்க முடியும். இதனால் வனப்பகுதியில் புலி மற்றும் சிறுத்தையின் எச்சங்கள், பசை தன்மையுடன் ஈரமாக இருக்கும் போது உடனடியாக சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்