ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ வேண்டும் என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு
ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ வேண்டும் என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் நாட்டை பிளவு படுத்துகிறார்கள் என்று கவர்னர் கூறியுள்ளார். ஆனால் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும். ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு. இது இந்தியாவை பிளவுபடுத்துகிற செயல் அல்ல. இந்தியாவில் உள்ள அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் தான் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இதில் அவர் வெற்றியும் பெறுவார். காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை வெற்றி அடைந்து வருகிறது. ஆனால் காவிரியில் தண்ணீர் திறக்கக்கூடாது என்று அங்கு போராட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு நாம் வலியுறுத்துவோம். ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை குறித்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால், நீதிமன்ற முடிவை பொறுத்து அரசு நடவடிக்கை எடுக்கும். நடவடிக்கை எடுப்பது என்பது நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தது. இவ்வாறு அவர் கூறினார்.