இறைபற்றுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான ஆட்சியாக தி.மு.க ஆட்சி உள்ளது- அமைச்சர் சேகர்பாபு

தி.மு.க. அரசானது இறையன்பர்களுக்கும், இறைபற்றுள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியான ஆட்சியாக உள்ளது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

Update: 2023-08-27 07:31 GMT

கோவை,

கோவை கணுவாய் அடுத்துள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார். அவர் கோவிலுக்கு மலை ஏறி சென்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார்.

தொடர்ந்து கோவிலை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார். மேலும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் இது தொடர்பான தகவல்களையும் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. அரசு அமைந்தவுடன் தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பக்தர்கள் வசதிக்காகவும், முதியோர்கள் மற்றும் உடல் உபாதை உள்ள பக்தர்களின் வசதிக்காகவும் ரோப்கார் மற்றும் தானியங்கி லிப்ட் அமைத்து தர வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி இன்று கோவை அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டோம். 560 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலுக்கு ரூ.13 கோடி மதிப்பில் 460 மீட்டர் அளவுள்ள ஒரு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று ஏற்கனவே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தியக்கூறுக்கான அறிக்கைகள் வந்த பின்னர் ரோப்கார் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கும்.

இதேபோன்று திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, இடும்பன் மலை, திருப்பரங்குன்றத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில்களுக்கும் ரோப்கார் வசதி ஏற்படுத்தி தர உள்ளோம். கரூர் அய்யர்மலை, சோழிங்கநல்லூர் கோவில்களில் ரோப் கார் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

கோவை மருதமலையில் தானியங்கி லிப்ட் அமைப்பதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இதுபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கோவில்களிலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் அந்தந்த பகுதிகளில் மலைக்கோவில்களில் அங்குள்ள அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே 2 ஆண்டுகளில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது திராவிட மாடல் ஆட்சியில் தான்.

அதேபோன்று தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.5135 கோடி மதிப்பிலான 5335 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசானது இறையன்பர்களுக்கும், இறைபற்றுள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியான ஆட்சியாக உள்ளது. விலங்குகள் அதிகம் நடமாடும் கோவில் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு காடுகளில் இருந்து வெளியே வராதபடி முள்வேலிகள் அமைக்க ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்