தி.மு.க.வின் 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு இருண்ட காலம் - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க.வின் 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு இருண்ட காலம் என்று திருச்சி அருகே நடைபெற்ற எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2023-07-06 21:30 GMT

எம்.ஜி.ஆர். சிலை திறப்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் மத்திய அரசின் பாரத மிகுமின் நிலையம் (பெல்) அமைந்துள்ளது. இதன் நுழைவு பகுதியில் பெல் நிறுவன அனுமதியுடன் அ.தி.மு.க.வின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 7 அடி உயரமுள்ள முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சிலையின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு அ.தி.மு.க. திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட செயலாளா் ப.குமார் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவா் பேசியதாவது:-

கருணாநிதி தம் மக்களுக்காக (குடும்பத்துக்காக) உழைத்தவர். ஜெயலலிதா தனக்கு பிறகு ஒரு தொண்டன் கட்சிக்கு தலைவராக வரவேண்டும் என்று நினைத்தார். அ.தி.மு.க.வில் விசுவாசமாக இருந்தால் எதாவது ஒரு பதவி நிச்சயம் கிடைக்கும். ஆனால் தி.மு.க.வில் பணம் இருந்தால் தான் பதவி கிடைக்கும். அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சர் ஆகலாம். கட்சிக்கு பொதுச்செயலாளர் ஆகலாம். தி.மு.க.வில் ஒரு சாதாரண தொண்டன் கட்சியின் தலைமை பதவிக்கு வரமுடியாது.

31 ஆண்டு ஆட்சி

எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை அசைத்து பார்க்க முடியாது. மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயன்றும் அ.தி.மு.க.வை அசைக்க முடியவில்லை. இதனால் தான் அவர் பி டீமை (ஓ.பன்னீர்செல்வம் அணி) உருவாக்கி உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் இங்கு மாநாடு நடத்தினார். ஆனால் நாம் எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்படும் என்று அறிவித்ததற்கே இங்கு மாநாடு போல் தொண்டர்களான நீங்கள் திரண்டு உள்ளீர்கள்.

தமிழகத்தில் 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான். இன்று எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து மத்தியில் ஆட்சி அமைக்கப்போவதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தமிழகத்தையே உங்களால் பாதுகாக்க முடியவில்லை. உங்கள் கட்சியினரையே பாதுகாக்க முடியவில்லை. வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் எப்போது ரெய்டு வரும் என்ற பயத்தில் பல அமைச்சர்களுக்கு தூக்கம் போய்விட்டது.

இருண்ட ஆட்சி

செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதும், ஏதாவது வாய்திறந்து விடுவாரோ என்று பயந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் அவரது குடும்பத்தினர் வரை அவரை சென்று பார்த்து வருகிறார்கள். தி.மு.க.வின் இந்த 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு இருண்ட கால ஆட்சி. 2 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு துன்பமும், வேதனையும் தான் கிடைத்துள்ளதே தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.

இந்த 2 ஆண்டு காலத்தில் மு.க.ஸ்டாலின் குடும்பம் கொள்ளை அடித்தது தான் மிச்சம். அவர்களது குடும்பத்தினர் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து இருப்பதாக நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் ஆடியோ மூலம் கூறுகிறார். செந்தில்பாலாஜி வாய் திறந்தால் இந்த ஆட்சி கோவிந்தா தான். இந்த ஆட்சியை காப்பாற்றவே அவர்கள் செந்தில்பாலாஜியை காப்பாற்ற துடிக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். ஆனால் ஒரு சில அறிவிப்புகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு அனைத்தையும் நிறைவேற்றியதாக கூறுகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் மின்கட்டண உயர்வு, வீட்டுவரி உயர்வு என்று அனைத்தையும் உயர்த்தி விட்டார்கள். விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. மு.க.ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலை இல்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சிவபதி, முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி, அமைப்பு செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்