சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு
16 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. இளைஞரணி 2-வது மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி நடக்கிறது.;
தி.மு.க. இளைஞரணி மாநாடு
தி.மு.க.வில் பல்வேறு அணிகள் இருந்தாலும், இளைஞரணிக்கு தொண்டர்கள் மத்தியில் முக்கிய இடம் உண்டு. தி.மு.க. இளைஞர் அணிக்கு முதன் முதலில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் மாநாடு நெல்லையில் நடத்தப்பட்டது. நெல்லை குலுங்கியது என்று சொல்லும் அளவிற்கு அந்த மாநாட்டை அன்றைய தி.மு.க இளைஞரணி செயலாளராக இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி காட்டினார்.
வெள்ளை நிற சீருடையில் மிடுக்காக திறந்த ஜீப்பில் அவர் சென்றார். அந்த பேரணியை திருவாரூர் தேர் வடிவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் இருந்தபடி அன்றைய முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதி பார்வையிட்டார். அந்த அளவுக்கு அந்த மாநாடு எழுச்சியாக நடந்தது.
16 ஆண்டுகளுக்கு பிறகு...
அதன்பிறகு தி.மு.க. இளைஞரணி சார்பில் மாநாடு எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்கு தலைமை ஏற்றதும் அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. இளைஞரணி 2-வது மாநாடு நடத்தப்பட இருக்கிறது.
இதற்காக முதலில் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய நகரங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போது சேலத்தில் நடத்த முடிவு செய்ப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த தி.மு.க. இளைஞரணி திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான மணியோசை எழுந்துள்ள நிலையில், தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அச்சாரம்
இதுதொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2007-ம் ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி தி.மு.க. வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்தியது தி.மு.க. இளைஞரணி முதல் மாநாடு. அதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாநாடு அறிவிப்பு தி.மு.க. இளைஞரணியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இப்போதே தொடங்கியுள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கான அச்சாரமாக இந்த மாநாடு அமைய உள்ளதாக தி.மு.க. இளைஞரணியினர் தெரிவித்துள்ளனர்.