"தி.மு.க. இளைஞரணி உழைப்புக்கு முழு அங்கீகாரம் கிடைக்கும்": உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பேச்சு
“தி.மு.க. இளைஞரணி உழைப்புக்கு முழு அங்கீகாரம் கிடைக்கும்” என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தெரிவித்தார்.
"தி.மு.க. இளைஞரணியினர் உழைப்புக்கு முழு அங்கீகாரம் கிடைக்கும்" என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி அண்ணாநகர் 12-வது தெருவில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
25 லட்சம் உறுப்பினர்கள்
தி.மு.க. இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க கட்சி தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் முதல் சுற்றில் தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் வீதம் 25 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து உள்ளோம்.
இதனை தொடர்ந்து 2-வது சுற்றில் வீடு, வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை தொடங்கி உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல்
கடந்த 1½ ஆண்டுகளாக தி.மு.க. தலைமையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்-அமைச்சர் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். இதனை இளைஞரணியினர் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் போல் வருகிற 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்பையும் இளைஞரணி கொடுக்கும்.
முழு அங்கீகாரம்
இளைஞரணியினர் இன்று ஒருநாள் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இளைஞரணியில் உங்கள் உழைப்புக்கு முழு அங்கீகாரம் கிடைக்கும். அதற்கு நான் பொறுப்பு.
தற்போது நான் இளைஞரணி செயலாளராக இருக்கிறேன். இந்த இளைஞரணியில் இருந்தவர்தான் தற்போது தமிழக முதல்-அமைச்சராக வந்து உள்ளார். ஆகவே இளைஞரணியினர் தொடர்ந்து பணியாற்றி, மாவட்ட கழகத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து, நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீடு, வீடாக சென்று...
பின்னர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு வெள்ளி செங்கோலை நினைவு பரிசாக அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அண்ணாநகர் பகுதியில் வீடு, வீடாக சென்று இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் இளைஞர்களிடம் கையெழுத்து பெற்று, அவர்களை உறுப்பினராக சேர்த்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்த சேகரன், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மதியழகன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர இளைஞரணி செயலாளர் ஆனந்த கேபிரியேல், பகுதி செயலாளர் ரவீந்திரன், வக்கீல் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.