பிடிஆர்-க்காக திமுக வழக்கு தொடுக்காது - டிகேஎஸ் இளங்கோவன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்காக திமுக வழக்கு தொடுக்காது என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.;
சென்னை,
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சொத்து குறித்து ஆங்கிலத்தில் பேசிய ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த பழனிவேல் தியாகராஜன், இந்த ஆடியோ பதிவு உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று நேரில் சந்தித்து பேசினார். ஆடியோ விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தநிலையில், முதல்-அமைச்சருடனான இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆடியோ விவகாரம் குறித்து திமுக செய்தித் தொடர்புத்தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது:-
"ஆடியோ விவகாரம் தனிப்பட்டது என்பதால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் தான் வழக்கு தொடுக்க வேண்டும், திமுக தொடுக்காது. ஆடியோ போலியானது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே விளக்கம் கொடுத்துள்ளார். மேற்கொண்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் புகார் கொடுக்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்." என்று கூறினார்.