தி.மு.க. ஆட்சியின் மாபெரும் சாதனை என்ன? சட்டசபையில் மு.க.ஸ்டாலின் விளக்கம்

தி.மு.க. ஆட்சியின் மாபெரும் சாதனை என்ன? என்பது குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

Update: 2023-01-13 21:01 GMT

சென்னை,

கடந்த 1½ ஆண்டில் எப்படி வளர்ச்சி அடைந்தோம் என்றால், சொன்னதைச் செய்தோம் அதனால் வளர்ந்துள்ளோம். அதுதான் உண்மை. தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் மிக விளக்கமாக சொல்லி இருக்கிறது.

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு அண்மையில் மாநிலங்களினுடைய வளர்ச்சி நிலை குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள சமூக வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் 63.3 புள்ளிகளைப் பெற்று, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இப்படி சொல்வது நானல்ல, தமிழ்நாடு அரசு அல்ல; மத்திய அரசு தான் இதனைச் சொல்லி இருக்கிறது.

ஒற்றை இலக்கு

இந்தியாவில் இருக்கிற பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்திருக்கிறது என்றால், அது சாதாரணமானது அல்ல. அதுதான் அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் தத்துவத்தினுடைய ஊட்டமும், வளமும், வளர்ச்சித்திறனும். நமது நோக்கம் ஒன்று தான், மக்கள் மனங்களின் மகிழ்ச்சி. இது ஒன்று தான் திராவிட மாடல் ஆட்சியின் முதலும் முடிவுமான ஒற்றை இலக்கு.

காலைச் சிற்றுண்டி சாப்பிடும் குழந்தைகள் முகத்தில், கட்டணமில்லா பஸ் பயணம் செய்யும் பெண்களின் முகத்தில் நித்தமும் காலையில் உதயசூரியன் உதிக்கிறது அல்லவா இதுதான் இந்த ஆட்சியினுடைய மாபெரும் சாதனையாகும்.

மின் இணைப்பு எவ்வளவு?

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச விவசாய மின் இணைப்புகள் 2.20 லட்சம் மட்டுமே. ஆனால், விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு 15 மாத காலத்தில் வழங்கிய இணைப்புகள் 1 லட்சத்து 50 ஆயிரம்.

பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, கல்லூரியில் படிக்கும் இளைஞர்களை மட்டுமல்ல; படிக்கவராமல் இடையில் நின்று விடக் கூடியவர்களையும் பள்ளி, கல்லூரிகளுக்குள் அழைத்து வருகிறோம்.

நன்மை தரும் நாள்

கடந்த 1½ ஆண்டுகளில் நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக்கு நன்மை தரும் நாளாக உயர்ந்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். அதற்காக அவர்கள் பாராட்டி வருகிறார்கள்.

கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 655 நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்துள்ளேன். ஓராண்டு என்பது 365 நாட்களாக இருந்தாலும் - ஒரு நாளைக்கு 2 நிகழ்ச்சிகள் கலந்துகொண்ட அளவுக்கு நான் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன்.

9 ஆயிரம் கி.மீ. சுற்றுப்பயணம்

அதிலே 551 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள். இடையில் கொரோனா தாக்கப்பட்டு சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியதாக இருந்தது. கால் வலி மற்றும் முதுகு வலி காரணமாக சில நாட்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்தேன். இத்தகைய இடர்பாடுகள் இல்லாமல் இருந்தால் இன்னும் 50 நிகழ்ச்சிகள் அதிகம் ஆகியிருக்கும்.

மொத்தமாக சொல்வதாக இருந்தால் கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து விட்டு வந்திருக்கிறேன். நாள்தோறும் உழைப்பதாகச் சொல்வார்கள் - இல்லை இல்லை நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன். என்னை வருத்திக் கொண்டு நான் அலையவில்லை.

திட்டங்கள் முன்னேற்றம் குறித்து கண்காணிப்பு

என்னுடைய அறையில் 'டேஷ் போர்டு' வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு நாளும் எந்தளவுக்கு முன்னேறிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை தொடர்ந்து நான் கண்காணித்து வருகிறேன்.

தீட்டிய திட்டங்கள் அனைத்தும் எந்தளவுக்கு ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டிருப்பதை அறிவதன் மூலமாக அரசாங்கத்தை முடுக்கிவிட்டுக்கொண்டிருக்கிறேன். இரவு தூக்க நேரம் மட்டுமே எனது ஓய்வு நேரமாக இருக்கிறது. பொறுப்பு கூடக்கூட ஓய்வு என்பது குறைந்துவிடும்.

ஒரு கோடி பேருக்கு தனிப்பட்ட உதவி

மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் மூலமாக ஒரு கோடியே 3 லட்சத்திற்கும் அதிகமான பேர் பயனடைந்துள்ளார்கள். அதாவது ஒரு கோடி பேருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்து கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் மூலமாக பயனடைந்தவர்கள் இவர்கள். மொத்தமுள்ள மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் நலத்திட்ட விழாக்கள் நடந்துள்ளன. முடிவுற்ற மொத்தப் பணிகள் 7 ஆயிரத்து 430; இதன் மொத்த மதிப்பு ரூ.3 ஆயிரத்து 50 கோடி ஆகும். இதுவரை அடிக்கல் நாட்டி, தொடங்கிவைக்கப்பட்ட மொத்தப் பணிகள் 13 ஆயிரத்து 428; இதன் மொத்த மதிப்பு ரூ.4 ஆயிரத்து 744 கோடி ஆகும்.

தேங்கிக்கிடந்த தமிழ்நாடு

இந்த அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்கீழ், தமிழ்நாடு முழுவதும் இதுவரை அனைத்து அரசுத் துறைகளின் சார்பிலும் ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்து 850 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலமாக அரசு எந்தளவுக்கு வேகத்துடன் செயல்படுகிறது என்பதை அறியலாம்.

ஏதோ முதல்-அமைச்சர் செயல்படுகிறார்; அமைச்சர்கள் செயல்படுகிறார்கள்; தலைமைச் செயலகம் செயல்படுகிறது என்பதாக இல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழ்நாடே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளாக தேங்கிக்கிடந்த தமிழ்நாட்டை முன்னோக்கி ஓட வைத்திருக்கிறோம். தேய்ந்து கிடந்த தமிழ்நாட்டை வளப்படுத்தி வருகிறோம்.

86 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றம்

இந்த அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு அறிவிப்புகளைச் செய்துள்ளது. அதாவது, கவர்னர் உரை அறிவிப்புகள் 75; என்னால் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் 67; மாவட்ட விழாக்களில் செய்த அறிவிப்புகள் 88; மாவட்ட கலெக்டர்கள் மாநாடு அறிவிப்புகள் 5; செய்தி வெளியீடு அறிவிப்புகள் 154; நிதிநிலை அறிக்கை 254; வேளாண்மை நிதிநிலை அறிக்கை 237; அமைச்சர்களால் மானியக் கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் 2424; இதர அறிவிப்புகள் 42 என இதுவரை மொத்தம் 3,346 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 86 சதவீதம் அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

அதாவது 2,892 அறிவிப்புகளுக்கு அரசாணை, அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் 852 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2,040 பணிகள் நடைபெற்று வருகின்றன. 422 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட தொடர்புடைய துறைகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 32 அறிவிப்புகள் குறித்த கருத்துருகள் மத்திய அரசினுடைய பரிசீலனையில் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்