உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
புதுக்கோட்டைக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் இருந்து கார் மூலம் அவர் நேற்று இரவு புதுக்கோட்டைக்கு வந்தார். அவருக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, சட்டத்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான ரகுபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் தி.மு.க.வினர் வரவேற்பு கொடுத்தனர். சால்வைகள், பூங்கொத்துகள், புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர். கட்டியாவயல் அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது கூட்டம் அதிகமானதால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். காரில் அமர்ந்தபடியே உதயநிதி ஸ்டாலின், தொண்டர்களின் வரவேற்பைபெற்று இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தும், கைகளை அசைத்தும் நன்றி தெரிவித்தார். சிலர் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர். அவர் கடியாப்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறந்தாங்கி, ஆலங்குடி, புதுக்கோட்டையில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மாலையில் புதுக்கோட்டையில் தடிகொண்ட அய்யனார் திடலில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார்.