கத்தியால் குத்தி தி.மு.க. பிரமுகரை கொல்ல முயற்சி

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதத்தில் தி.மு.க. பிரமுகரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-05 19:11 GMT

வீடு புகுந்து தாக்குதல்

கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டை சேர்ந்தவர் மதியழகன்(வயது 40). தி.மு.க. பிரமுகரான இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரது வீட்டு கதவை தட்டியது. உடனே மதியழகன் கதவை திறந்தார்.

அப்போது, வீட்டுக்குள் புகுந்த கும்பலில் ஒருவர் துணியால் மதியழகனின் முகத்தை மூடினார். பின்னர் அந்த கும்பல் மதியழகனை கத்தியால் குத்தியும், இரும்பு பைபால் அடித்தும் கொலை செய்ய முயன்றனர். அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்

இது தொடர்பாக மதியழகன் தூக்கணாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், ஊராட்சி மன்ற தலைவி கலைச்செல்வியின் கணவருமான ராமச்சந்திரனுக்கும் எனக்கும் ஒரு கோவிலை நிர்வகிப்பது மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதில், ராமச்சந்திரன் தரப்பினர் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் ராமச்சந்திரன் (வயது 67), பள்ளிப்பட்டை சேர்ந்த சீத்தா (வயது 58), பார்த்திபன் (வயது 42), தினகரன் (வயது 48) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சீத்தா, பார்த்திபன், தினகரன் ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்