"வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை,
நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை துவக்கிவிட்டனர். தி.மு.க.வை பொறுத்த வரை கட்சியை வலுப்படுத்த மேலும் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை செய்து வருகிறது.
இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை. மாவட்டச்செயலாளர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறேன். கட்சிப் பணிகளை பொறுப்போடு செய்ய வேண்டும், இல்லையென்றால் மாற்றப்படுவீர்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
பூத் வாரியாக கட்சியில் நியமிக்கப்பட்டு உள்ள ஒவ்வொரு நிர்வாகிகளுடனும் நீங்கள் தொடர்பு கொண்டு பேச வேண்டும். தி.மு.க. அரசு செய்துள்ள சாதனைகளை, திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல வேண்டும். வெற்றியே நமது குறிக்கோள் என்ற எண்ணத்தில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை வேகப்படுத்த வார்டு வாரியாக கூட்டங்களையும் நடத்த வேண்டும்.
வாக்குச்சாவடி குழுக்களுக்கான பணிகளை விரைவாக மேற்கொள்ளவேண்டும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியினரின் நலன் சார்ந்தும் செயலாற்ற வேண்டும். சுணக்கமாக செயல்படும் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பணிகளை வேகப்படுத்த வேண்டும். கருணாநிதி நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை வெகு சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.