தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு ரூ.1 கோடி பொற்கிழி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
திருப்பத்தூரில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு ரூ.1 கோடி பொற்கிழி வழங்கினார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. மூத்த நிர்வாகிகள் 1,000 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 கோடி வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
ரூ.26 கோடி வழங்கப்பட்டுள்ளது
என்னை வாழ்த்துவதற்கு கலைஞர் இல்லையே என்ற குறை இன்று போய்விட்டது. என்னை வாழ்த்துவதற்கு இத்தனை கலைஞர்கள் வந்துள்ளனர். கலைஞர் அறக்கட்டளை என்ற பெயரில் கட்சி மூத்த முன்னோடிகளுக்கு மாவட்டம் தோறும் 8 பேருக்கு அவர்களுடைய மருத்துவ செலவு, குடும்பத்தின் கல்வி செலவுக்காக ரூ.25 ஆயிரம் என்ற அடிப்படையில் தலைமை கட்சி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் இருந்து இதுவரை ரூ.5 கோடியே 50 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் கடந்த 4 மாதங்களில் மருத்துவ உதவி தேவைப்படும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் என இதுவரை ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த 1½ ஆண்டுகளில் என்னுடைய அரசு பயணம் உள்ளிட்ட எந்த பயணமாக இருந்தாலும் இதுபோன்று பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.26 கோடிக்கும் அதிகமாக கட்சி மூத்த முன்னோடிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எந்த கட்சியும் செய்யாததை தி.மு.க. செய்துள்ளது.
கனவிலும் நடக்காது
அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்துகிறார்கள். தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இதுபோன்ற சோதனைகளை நடத்தி தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.
முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சோதனைகளை எல்லாம் கையில் வைத்துக்கொண்டுதான் கடந்த 5 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் பா.ஜ.க. அரசு வைத்திருந்தது. அதே வேலையைத்தான் தி.மு.க.விடம் செய்து பார்க்கலாம் என பா.ஜ.க. அரசு நினைக்கிறது. அது கனவிலும் நடக்காது.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.