திருமங்கலம் தொகுதியில் மக்கள் வளர்ச்சி திட்டங்களை தி.மு.க. அரசு தொடர்ந்து புறக்கணித்தால் உண்ணாவிரதம்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

திருமங்கலம் தொகுதியில் மக்கள் வளர்ச்சி திட்டங்களை தி.மு.க. அரசு தொடர்ந்து புறக்கணித்தால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.;

Update: 2023-09-18 23:45 GMT

திருமங்கலம்

திருமங்கலம் தொகுதியில் மக்கள் வளர்ச்சி திட்டங்களை தி.மு.க. அரசு தொடர்ந்து புறக்கணித்தால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

புதிய பாலம்

திருமங்கலம் தொகுதி டி.புதுப்பட்டி ஊரணி பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் மழைக்காலங்களில் வெள்ளம் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்., திருமங்கலம் யூனியன் சேர்மன் லதா ஜெகன் தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பூமி பூஜை, அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

உண்ணாவிரதம்

அம்மா உணவு, தாலிக்கு தங்கம், மடிக்கணினி, முதியோர் உதவித்தொகை திட்ட செயல்பாடுகள் இல்லை. மகளிர் உரிமைத்தொகை வழங்கியதில் குளறுபடி உள்ளது இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்றால் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும்.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்கு பாரபட்சம் காட்டுகின்றனர். திருமங்கலம் தொகுதியில் மக்கள் வளர்ச்சி திட்டங்களை பாரபட்சத்தோடு தி.மு.க. அரசு செயல்பட்டால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு எடுத்துச்சென்று அனுமதி பெற்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து வளர்ச்சி திட்ட பணிகளை கொண்டு வருவோம். பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறீர்கள். நான் சவால் விட்டு சொல்கிறேன். கலெக்டர் ஆய்வு கூட்டத்தை நடத்துங்கள். அமைச்சர் தொகுதிக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்து உள்ளீர்கள். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கிறீர்கள் என விவாதிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் சவுடார்பட்டி சரவணன், இளைஞர் அணி கபி காசிமாயன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி, உச்சப்பட்டி செல்வம், மாணவரணி இணை செயலாளர் வாகைகுளம் சிவசக்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகேசன், பாபு மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்