'தி.மு.க. பைல்ஸ்-2' ரூ.5 ஆயிரத்து 600 கோடி ஊழல் பட்டியல்: கவர்னரிடம் அண்ணாமலை வழங்கினார்

தி.மு.க. பைல்ஸ்-2 பெயரில் தி.மு.க. ஊழல் பட்டியலை கவர்னரிடம் அண்ணாமலை வழங்கினார். இதில் இருந்து, ரூ.5 ஆயிரத்து 600 கோடிக்கான ஊழல் பட்டியல் முதலில் வெளியாகி உள்ளது.

Update: 2023-07-26 20:45 GMT

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கடந்த ஏப்ரல் 14-ந்தேதி 'தி.மு.க. பைல்ஸ்-1' என்ற பெயரில் தி.மு.க.வை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் 12 பேர் மீது முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர்களின் சொத்து பட்டியலை வீடியோவாக வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து, 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை தொடங்குவதற்கு முன் 'தி.மு.க. பைல்ஸ்-2' வெளியிடுவேன் என்று தெரிவித்து இருந்தார்.

நாளை (வெள்ளிக்கிழமை) 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை தொடங்க உள்ள நிலையில், அண்ணாமலை, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து 'தி.மு.க. பைல்ஸ்-2' என்ற பெயரில் 3 ஊழல் புகார்களை மிகப்பெரிய 'டிரங்க்' பெட்டியில் வைத்து வழங்கினார்.

மேலும், தமிழகத்தில் மது விலக்கு சாத்தியம் என்பதற்கான வெள்ளை அறிக்கையையும் வழங்கினார். அவருடன், மாநில துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, ஏ.ஜி.சம்பத், கரு.நாகராஜன், பால் கனகராஜ், டால்பின் ஸ்ரீதர், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

வெள்ளை அறிக்கை

பின்னர் வெளியில் வந்த கரு.நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மது விலக்கை படிப்படியாக அமல்படுத்துவது குறித்த வெள்ளை அறிக்கை எங்களிடம் இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு எவ்வித பதிலும் இல்லாத நிலையில், அந்த வெள்ளை அறிக்கையை கவர்னர் ஆர்.என்.ரவியிடம் வழங்கி உள்ளோம்.

கள் விற்பனையில் வருவாய்

அதில், மது விற்பனையை எப்படி படிப்படியாக குறைப்பது? 2 ஆண்டுகளில் 75 சதவீத மது விற்பனையை எப்படி குறைப்பது? அதற்கான வருவாயை எப்படி ஈட்டுவது? என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மென்பொருள் 'டெக்னாலஜி'யை அதிக அளவில் பயன்படுத்துவது. கனிம வளங்களை அதிகமாக அரசாங்க வருவாய்க்கு உட்படுத்துவது. எலக்ட்ரானிக்ஸ் துறையை அதிகமாக வளர்ப்பது உள்ளடக்கிய பல்வேறு திட்டங்களை அதில் தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக உடல்நலத்துக்கு கேடு விளைவிக்காத கள் விற்பனையை கொண்டு வருவதன் மூலம் எப்படி வருவாயை பெருக்க முடியும் என பல்வேறு திட்டங்களை வெள்ளை அறிக்கையாக கவர்னரிடம் கொடுத்து இருக்கிறார்.

அதே போன்று, 'தி.மு.க. பைல்ஸ் - 2' என்ற பெயரில் மிகப்பெரிய பெட்டியில் வைத்து 9 அமைச்சர்கள், அவர்களது பினாமி சொத்துகள் மற்றும் முறைகேடுகள் வழங்கப்பட்டு உள்ளது. அதில் 5 ஆயிரத்து 600 கோடி ஊழல் பற்றி மட்டும் கூறுகிறேன்.

ரூ.5,600 கோடி ஊழல்

தமிழ்நாடு மருத்துவ கழகத்திற்கு மருந்துகளை வினியோகம் செய்ததில் 600 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதேபோல் தமிழ்நாடு அரசின் ஈ.டி.எல். நிறுவனம் சார்பில் ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று உள்ளது.

இதே போன்று அரசு பஸ்களில் ஒளி மிளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்காக 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் எதுவும் ஸ்டிக்கர் தயாரிக்கிற கம்பெனி அல்ல. இந்த வியாபாரத்துக்கும் அந்த கம்பெனிகளுக்கும் சம்பந்தம் இல்லை. ஜி.எஸ்.டி. கட்டப்படவில்லை. வீட்டு முகவரிகளில் இயங்கி வரும் இந்த கம்பெனிகள் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. மொத்தத்தில் ரூ.5 ஆயிரத்து 600 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்