வாக்குச்சாவடி முகவர் பட்டியலை நவம்பர் 10-க்குள் அனுப்பிவைக்க மாவட்ட செயலர்களுக்கு திமுக உத்தரவு

வாக்குச்சாவடி முகவர் பட்டியலை நவம்பர் 10-க்குள் அனுப்பிவைக்க மாவட்ட செயலர்களுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-31 16:52 GMT

சென்னை,

வாக்குச்சாவடி முகவர் பட்டியலை வருகிற நவம்பர் 10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 9.10.2022 அன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சர் கழகத் தலைவர், பூத் கமிட்டி அமைத்திட வேண்டும் என்று அறிவித்ததன் அடிப்படையில், முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டக் கழகச் செயலாளரும், தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர் (BLA-2) பட்டியலை தயார் செய்து வரும் 10.11.2022-ம் தேதிக்குள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

அவ்வாறு நியமிக்கப்படும் வாக்குச்சாவடி முகவர் (BLA-2) அந்தந்த வாக்குச்சாவடியில் குடியிருப்பவராகவும், வாக்குச்சாவடி குறித்து முழுமையாகத் தெரிந்தவராகவும், களப்பணி செய்பவராகவும் இருத்தல் வேண்டும்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், தத்தமது மாவட்டத்தில் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்களிடம் இப்பணியை ஒப்படைத்து, அவர்களிடமிருந்து பெறப்பட்ட பட்டியலைத் தொகுத்து தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் வாக்குச்சாவடி முகவர் பட்டியல் தலைமைக் கழகத்தால் சரிபார்க்கப்பட்டு தலைவரின் பார்வைக்கு வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாக்குச் சாவடி முகவர் (BLA-2) நியமிக்கும் பணியினை விரைந்து முடித்து வருகிற 10.11.2022க்குள் முடித்து தலைமைக் கழகத்திற்கு அனுப்புதல் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்