இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. பிரமுகர் தீக்குளித்து உயிர்த்தியாகம் ...!

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பிரமுகர் தீக்குளித்தார்.;

Update: 2022-11-26 08:55 GMT

மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (வயது 85). இவர் நங்கவள்ளி தி.மு.க. முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும் மணி, ரத்னவேல் என்ற 2 மகன்களும் உள்ளனர். இவர் தி.மு.க. மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இவர் இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டபடி தாழையூர் தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தார். கேனில் பெட்ரோல் வாங்கி வந்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தீப்பற்ற வைக்கும் முன்பு ஒரு வெள்ளைத் தாளில் வாசகம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில் மத்திய அரசே அவசர இந்தி வேண்டாம் தாய்மொழி தமிழ் இருக்க இந்தி எதுக்கு என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தொண்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்