ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 11 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். தொழில்போட்டியில் கூலிப்படையை வைத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.;

Update: 2023-08-15 18:52 GMT

சுங்குவார்சத்திரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் குமுதா டோம்னிக். இவருடைய மகன் ஆல்பர்ட். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி பொறுப்பாளராக உள்ளார். எச்சூர் ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கழிவுகள் எடுக்கும் பணி, தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கேன் வினியோகம் செய்வது, தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தேவையான மண், சிமெண்டு கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் விற்பனை செய்வது மற்றும் கட்டுமான பணி ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்தார்.

கடந்த 5-ந்தேதி மாலை சுங்குவார்சத்திரம் அருகே தொழிற்சாலை சிப்காட் சாலையோரத்தில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் சுதாரித்து கொண்ட ஆல்பர்டை துரத்தி துரத்தி முகம் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து மர்ம கும்பல் தப்பிச்சென்றது. இதில் ஆல்பர்ட் பரிதாபமாக இறந்தார்.

சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு வீசிய நபர்கள் யார்? கூலிப்படை கும்பலா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் சங்கர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தபட்டது.

கடந்த 7-ந்தேதி இந்த கொலை வழக்கு தொடர்பாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த பிரணவ் (வயது 20), தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் (21), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தினேஷ் குமார் (21) ஆகியோர் தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இதையடுத்து பழைய பெருங்களத்தூரை சேர்ந்த மாதவன் (வயது 22) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

இந்த வழக்கில் 3 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரணடைவதற்கு சென்றது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 17 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் என்பது தெரிய வந்தது.

கைது

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான எச்சூரை சேர்ந்த காஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க. நிர்வாகி சுரேஷ் (32), கட்டுமான நிறுவன தொழில் அதிபர் செந்தில்குமார் (48) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. விசாரணையில் சுரேஷ், செந்தில்குமார் ஆகியோர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

செந்தில்குமார் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள புதிய நிறுவனங்கள் அமைக்கும் கட்டுமான பணி மேற்கொண்டு வந்தார். ஆல்பர்ட் கட்டுமான பணி நடைபெறும் கட்டிடங்களில் மண்ணை கொட்டி நிரப்பும் பணியை செய்து வந்ததாகவும் கடந்த ஜூன் மாதம் ஆல்பர்ட்டிற்கு முறையாக கணக்கு சொல்லாமல் ஏமாற்றி லட்சகணக்கில் முறைகேடு செய்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஆல்பர்ட் தனக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டு தொல்லை செய்ததால் ஆல்பர்ட்டை மாற்றிவிட்டு அதே மண் நிரப்பும் பணியை எச்சூரை சேர்ந்த பா.ம.க. நிர்வாகி சுரேஷுக்கு கொடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆல்பர்ட்டுக்கும், சுரேசுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சினை ஏற்பட்டதன் விளைவாக ஆத்திரத்தில் ஆல்பர்ட்டை கொலை செய்து விட வேண்டும் என்று சுரேஷ் முடிவு செய்து தாம்பரம் பகுதியில் உள்ள கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கு ஆகும் செலவை தொழில் அதிபர் செந்தில்குமார் ஏற்றுக்கொண்டுள்ளார். இதை தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்தவர்களை சுரேஷ் எச்சூரில் உள்ள தனது வீட்டிலேயே தங்க வைத்து ஆல்பர்ட் எங்கு செல்கிறார், எப்போது வருவார் என்று கண்காணித்து வந்தார்.

கடந்த ஜூலை மாதமே ஆல்பர்ட்டை கொலை செய்ய முயற்சி செய்த போது அப்போது ஆல்பர்ட் தப்பித்து உள்ளார். தற்போது இந்த கொலை நடந்துள்ளது.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கொலை வழக்கில் மேலும் மதுரையை சேர்ந்த சுந்தர் (30), ஆனந்த வினோத் (25), எச்சூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் (32) தினேஷ் (30), சந்துரு (20),சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த மாதவன் (31), சபரீசன் (25), அரவிந்த் (26), அஸ்வின் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்