தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை ஆர்ப்பாட்டம்
தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை,
அண்மையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாடு என்ற பெயரை ஏற்றுக்கொள்ளாததால் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காமராஜர் பற்றிய உண்மை வரலாற்றை திரித்து பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவருமான என்.ஆர்.தனபாலன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேஷ், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், அகில இந்திய நாடார் மகாஜனசபை தலைவர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன், சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் த.ரவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பதிலடி கொடுப்பார்கள்
சென்னை வாழ் நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் எம்.சவுந்தரபாண்டியன், சத்திரிய நாடார் இயக்க தலைவர் எஸ்.சந்திரன் ஜெயபால், இந்திய நாடார்கள் கூட்டமைப்பு துணைத்தலைவர் டி.ராஜ்குமார், நாடார் மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.முத்துசாமி நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் பொருளாளர் டி.மாரித்தங்கம், செயலாளர் மயிலை பி.சந்திரசேகர், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க தலைவர் கே.சி.ராஜா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், நசரத்பேட்டை வட்டார நாடார் சங்க தலைவர் பி.முருகேசன், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், சென்னை வாழ் நாடார் சங்க செயலாளர்கள் ஜெயம் செல்லத்துரை, எம்.மாணிக்கம், எல்.சி.மனோகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஜெயக்குமார் பேசும்போது, "பெருந்தலைவர் காமராஜரை பற்றி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இழிவுபடுத்தி பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் ஈரோடு கிழக்கு தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் நாடார் சமுதாய மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். மேலும், சாதிகளை பற்றியும், மறைந்த தலைவர்கள் பற்றியும் கொச்சைப்படுத்தி பேசுவது ஆ.ராசாவுக்கு கைவந்த கலை. எனவே, நிச்சயம் தி.மு.க. ஆட்சிக்கு அனைத்து சமுதாய மக்களும் முடிவு கட்டுவார்கள்" என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் என்.ஆர்.தனபாலன் பேசும்போது, "ஆ.ராசா ஒன்றை சிந்தித்து பார்க்க வேண்டும். அவர்களின் சமுதாயத்தினர் கோவிலுக்கு போக முடியாத நிலையில், அதே சமுதாயத்தை சேர்ந்தவரை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் காமராஜர். கக்கன் போன்றோருக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் அளித்தார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். காமராஜர் அனைத்து சமுதாயத்துக்கும் சொந்தக்காரர். இது ஒரு அடையாள போராட்டம்தான். முதல்-அமைச்சரிடம் இருந்து பதில் வராவிட்டால், அடுத்தகட்டமாக தமிழகம் தழுவிய போராட்டம் வெடிக்கும்" என்றார்.