இளம்பெண்ணை துன்புறுத்திய புகாரில் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது

ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினாவை ஆந்திராவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-01-25 11:44 GMT

சென்னை,

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இ.கருணாநிதி. இவரது மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா. இதனிடையே, திமுக எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வீட்டில் கடந்த ஆண்டு மாத சம்பளம் அடிப்படையில் ரேகா (வயது 18) என்ற இளம்பெண் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். பல மாதங்களாக ரேகா வீட்டு வேலை செய்துவந்த நிலையில் அவருக்கு பேசியபடி சம்பளத்தை கொடுக்காமல் ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினா துன்புறுத்தியுள்ளனர். மேலும், இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தி, ஜாதி ரீதியிலும், ஆபாசமாகவும் பேசியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எம்.எல்.ஏ.வின் மருமகள் மெர்லினா அடித்து துன்புறுத்தியதில் ரேகாவின் தலை, முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டிருப்பது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

மேலும், தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ரேகா நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திமுக எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா மீது வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா இருவரும் தலைமறைவாகினர் .

இந்நிலையில், பணிப்பெண்ணை தாக்கிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினாவை ஆந்திராவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்