தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கை: இன்று வெளியிடுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - யார் யாருக்கு இடம்..?

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

Update: 2024-03-19 23:58 GMT

கோப்புப்படம்

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கி 27-ந் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இதில் தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை தொகுதி பங்கீடு அனைத்தும் நிறைவடைந்து விட்டன. அந்த கூட்டணியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை கூட அறிவித்துவிட்டன. அதே நேரம் அ.தி.மு.க. வுக்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும், இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடியவில்லை.

மற்றொரு அணியான பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்த தொகுதி என்று அறிவிக்கவில்லை. அதேபோல் மற்ற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் வடிவமைத்த நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையையும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (புதன்கிழமை) வெளியிட உள்ளார்.

தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல தேர்தல்களில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே கதாநாயகனாக இருந்துள்ளதால், இந்த தேர்தலிலும் அப்படி ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.

யார் யாருக்கு இடம்..?

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலில் தூத்துக்குடி- கனிமொழி, வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி (முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன்), தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன், மத்தியசென்னை- தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு, காஞ்சீபுரம் (தனி) - ஜி.செல்வம், அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை, வேலூர்- கதிர் ஆனந்த் (அமைச்சர் துரைமுருகன் மகன்), கள்ளக்குறிச்சி- கவுதம சிகாமணி (முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன்), நீலகிரி (தனி) - ஆ.ராசா, பொள்ளாச்சி- சண்முகசுந்தரம் ஆகியோரது பெயர்கள் மீண்டும் இடம் பெறும் என்று தெரிகிறது.

சேலம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி அல்லது பி.கே.பாபு (உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாநில செயலாளர்), கோவை- மகேந்திரன் (தமிழச்சி தங்கப்பாண்டியன் சம்பந்தி) அல்லது மாவட்ட செயலாளர் கார்த்திக், தஞ்சை- எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அல்லது டாக்டர் அஞ்சுகம் பூபதி, தர்மபுரி -டாக்டர் செந்தில் அல்லது ஆனந்த், தென்காசி (தனி) - தனுஷ் எம்.குமார் அல்லது டாக்டர் ராணி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது.

தி.மு.க. கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி இடம் பெற்றிருந்தது. அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது பா.ஜனதா கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி இணைந்துள்ளது. எனவே பெரம்பலூர் தி.மு.க. களம் காண்கிறது. இந்த தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.

கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட ஆரணி, தேனி ஆகிய 2 தொகுதிகளில் இம்முறை தி.மு.க. போட்டியிடுகிறது. ஆரணி தொகுதியில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது. தேனி தொகுதியில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட பொறுப்பாளர் இம்ரான் ஆரூணுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவர் தேனி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜே.எம்.ஆரூணின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு தொகுதியில் கடந்த முறை ம.தி.மு.க. போட்டியிட்டது. தற்போது இந்த தொகுதி தி.மு.க. வசம் வந்துள்ளது. இந்த தொகுதியின் வேட்பாளராக தி.மு.க. இளைஞரணி மாநில துணை செயலாளர் பிரகாஷ் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, 'நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞரணிக்கு வாய்ப்பு தாருங்கள்' என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

இதேபோல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான (புதுச்சேரி சேர்த்து) வேட்பாளர் பட்டியல் வருகிற 22-ந் தேதி வெளியாக வாய்ப்புள்ளது என்று அக்கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை இன்று வெளியாக உள்ள நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்