திருக்கோவிலூர் அருகேசரக்கு வாகனம் மோதி தி.மு.க. பிரமுகர் சாவுஉடலை சாலையில் வைத்து கிராம மக்கள் மறியல்

திருக்கோவிலூர் அருகே சரக்கு வாகனம் மோதி தி.மு.க. பிரமுகர் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரதுஉடலை சாலையில் வைத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-07 18:45 GMT


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள கூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 58). தி.மு.க. பிரமுகரான இவர், மணலூர்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தின் மேலாளராகவும் இருந்து வந்தார்.

நேற்று காலை, இவர் தனது வீட்டில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் மணலூர்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். கூவனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

சாலை மறியல்

இதுபற்றி அறிந்த கூவனூர் கிராம மக்கள் ஏழுமலையின் உடலை சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது, எனவே வேகத்தை அடைக்க வேண்டும், நீண்டநாட்களாக இதை வலியுறுத்தி வரும் நிலையில் அலட்சியமாக இருந்து வரும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் தான் இது போன்ற விபத்து மற்றும் உயிரிழப்பு நிகழ்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, திருப்பாலபந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வேகத்தடை அமைப்பது குறித்து துறை அதிகாரிகளிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதன்பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டனர்.

வாலிபர் மீது வழக்கு

இதையடுத்து, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கண்ணக்குரிக்கை கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன் மகன் சம்பத் (31) என்பவர் மீது திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மறியல் காரணமாக, அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்