அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்துவிட்டு திரும்பியபோதுமோட்டார் சைக்கிள் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலி2 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் சோகம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்துவிட்டு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலியானார்.
திருவெண்ணெய்நல்லூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கருமர மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ரஷீம்பேக். இவரது மகன் பாரூக் (வயது 27). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். மேலும் தி.மு.க. பிரதிநிதியாகவும் இருந்து வந்தார். இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் 5.7.2023 அன்று திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சேலத்தில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். அப்போது விழுப்புரம் மாவட்ட எல்லையான பிடாகத்தில் தி.மு.க.வினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
இதில், பாரூக் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த அன்சாரி மகன் முகமது ரியாஸ், ரஷீம் மகன் அமானுல்லா மற்றும் தி.மு.க. நிர்வாகிகளுடன் பிடாகம் சென்றார்.
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்
அங்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்துவிட்டு, பாரூக் தனது நண்பர்களுடன் ஒரு ஓட்டலில் சாப்பிட்டார். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூரில் உள்ள ஒரு வங்கி அருகே வந்த போது, அரசூர் இந்திரா நகரை சேர்ந்த புனிதவதி (40) என்பவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். இதை பார்த்த, பாரூக் தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். இருப்பினும் நிலைதடுமாறி, புனிதவதி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
தி.மு.க. பிரமுகர் பலி
இதில் பாரூக் உள்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து பாரூக் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். காயமடைந்த முகமது ரியாஸ், அமானுல்லா, புனிதவதி ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.