நல்ல திட்டங்களை நிறுத்துவதே தி.மு.க. அரசின் வேலை -எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த நல்ல திட்டங்களை நிறுத்துவதே தி.மு.க. அரசின் வேலை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூரில், மின்சார கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
நாளைய தினம் (இன்று) மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தார். அவரது மகன் மு.க.ஸ்டாலினுக்கு அவர் முடிசூட்டினார். இப்போது அவரது மகனுக்கு முடிசூட்டு விழா நடக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறு, பாலாறு ஓடுமா? தமிழக மக்களுக்கு எந்த வகையிலும் நலன் கிடைக்காத ஆட்சி தி.மு.க.
தி.மு.க. அரசின் வேலை
தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கும், தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கும் முடிவு கட்டுவோம். தி.மு.க. என்றால் குடும்ப ஆட்சி, குடும்ப கட்சி. அது கட்சி அல்ல, கம்பெனி. இதில் யார் வேண்டும் என்றாலும் டைரக்டர் ஆகி கொள்ளலாம். அ.தி.மு.க.வில் இருந்தவர்கள்தான் அங்கே அமைச்சர்களாக, எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து நல்ல திட்டங்களையும் இல்லாமல் செய்வதுதான் தி.மு.க. அரசின் வேலையாக உள்ளது. கடந்த 20 மாத ஆட்சியில் என்னென்ன நலத்திட்டங்கள் செய்தீர்கள். நாங்கள் கடந்த 4½ ஆண்டுகளில் என்ன திட்டங்கள் செய்தோம் என ஒரே மேடையில் விவாதிக்கலாம் என முதல்-அமைச்சரை அழைத்தேன், வரவில்லை.
அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை பல முதியவர்களுக்கு தற்போது நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் வருகிறது. அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் யார்? யாருக்கு? முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதோ அவர்களுக்கு உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.
தொங்கி சென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி
அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு புயல்களின் போது நிவாரண பணிகளை சிறப்பாக செய்தோம். அதேபோல் கொரோனா தொற்று பரவல் காலத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை அளித்து அந்த கஷ்டமான காலத்தை அ.தி.மு.க. ஆட்சியில் திறம்பட சமாளித்தோம். இன்றைக்கு மாண்டஸ் என்று ஒரு புயல் வந்தது. வந்த வேகத்தில் அது போய்விட்டது. அதனால் எந்த சேதமும் இல்லை.
ஆனால் சேதம் வந்தது போல் தமிழகத்தை முழுவதும் கண்காணிக்கிறோம் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் அதில் விளம்பரம் தேடிக்கொள்கிறார். முதல்-அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் மேயர் தொங்கி கொண்டு செல்கிறார். அவர் தொங்கி கொண்டு செல்லலாம் அவர் கட்சிக்காரர். ஆனால் திறமையான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்த வாகனத்தில் புட்போர்டில் தொங்கி கொண்டு செல்கிறார். இது வேதனை அளிக்கிறது. கண்டிக்கத்தக்க செயலாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.