தி.மு.க.வினர் எந்த வழிபாட்டு முறைக்கும் எதிரானவர்கள் அல்ல
தி.மு.க.வினர் எந்த வழிபாட்டு முறைக்கும் எதிரானவர்கள் அல்ல என்று அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில்:
தி.மு.க.வினர் எந்த வழிபாட்டு முறைக்கும் எதிரானவர்கள் அல்ல என்று அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
குமரி மாவட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், மாநகராட்சி மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு அரசியல் கட்சி பிரமுகர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங், தி.மு.க. மேற்கு மாவட்ட பொருளாளர் மரிய சிசுகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
விரைவில் பணிகள்
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான பிரச்சினைகளான கல்குவாரிகளை முறைப்படுத்துவது, தேங்காப் பட்டணம் துறைமுக பணிகளை துரிதப்படுத்துவது, சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. தேங்காப்பட்டணம் துறைமுகத்தை பொருத்தவரை 258 கோடி ரூபாயில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
பா.ஜனதா மாநில தலைவர் சொல்லியிருக்கிறார், நான் விவசாயம் செய்தாவது பிழைத்துக் கொள்வேன். ஆனால் அது தமிழக முதல்-அமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் இயலாது என்று கூறியிருக்கிறார். நான் சொல்கிறேன், அவர் பேசி வருகிற சனாதன தர்மம், மனுநீதி சாஸ்திரம் போன்றவை அவரை போன்றவர்களை, அந்த குலத்தொழில் செய்வதற்குத்தான் வலியுறுத்துகிறது. ஆனால் அதைத் தாண்டி அவர் கல்வி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரி ஆகியிருக்கிறார் என்றால் அதுதான் திராவிட இயக்க அரசியலின் அடிப்படை. இல்லாவிட்டால் அவர் விவசாயம் தான் செய்திருப்பார்.
அவரவர் விருப்பம்
விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என்று குற்றம்சாட்டுவது சரியல்ல. இது அவரவர்களின் விருப்பத்தை பொறுத்தது. இந்த அரசுக்கு எந்த மதமும் கிடையாது. எனவே மதங்களுக்கு பின்னால் அரசுகள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்வார்கள். நாங்கள் எந்த வழிபாட்டு முறைக்கும் எதிரானவர்கள் அல்ல. அதிலும் தி.மு.க.அரசு அதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இது எல்லோருக்குமான அரசாக உள்ளது. பா.ஜனதா கட்சியினர் சிலவற்றை திணிப்பதற்காக சில முயற்சிகளை செய்து வருகிறார்கள். தி.மு.க. சில பாரம்பரிய நடைமுறைகளை கடைபிடித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.