நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தி.மு.க. உண்ணாவிரதம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-20 20:54 GMT

காஞ்சீபுரம்,

நீ்ட் தேர்வை ரத்து செய்யக்கோரி காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மருத்துவ அணி கதிரவன், மாணவரணி சுரேஷ்குமார் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாநகராட்சி பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த 15-வது வார்டு இளைஞர் அணி நிர்வாகி யுவராஜ், தனக்கு திருமணம் முடிந்த கையோடு தனது மனைவி வைஷாலியுடன் திருமண கோலத்திலேயே உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்க புத்தகத்தில் புதுமண தம்பதி கையெழுத்திட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக டி.ஆர்.பாலு எம்.பி., செல்வம் எம்.பி., அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். எம்.எல்.ஏ.க்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, கருணாநிதி, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான நாசர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூர்), கிருஷ்ணசாமி(பூந்தமல்லி), டி.ஜெ.கோவிந்தராஜன்(கும்மிடிப்பூண்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரான சந்திரன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி கலந்து கொண்டு பழச்சாறு வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்