தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை இந்த ஆண்டாவது நிறைவேற்ற வேண்டும்-ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை இந்த ஆண்டாவது நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Update: 2022-12-31 20:23 GMT

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை இந்த ஆண்டாவது நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

நலத்திட்டங்கள்

ஜெயலலிதா பேரவை சார்பில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 23-ந் தேதி சமுதாய சமத்துவ திருமணம், டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நடக்கிறது. அதில் உதயகுமார் மகள் பிரியதர்ஷினி உள்பட 51 பேருக்கு, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்திற்கான அழைப்பிதழை, திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள, வன்னி வேலம்பட்டி, புதூர் முத்துராமலிங்கபுரம், சின்னா ரெட்டிபட்டி, பெரியபூலாம்பட்டி, முத்து நாகையாபுரம், குருவப்பநாயக்கன்பட்டி, சின்ன பூலாம்பட்டி, தொட்டியபட்டி, பொன்னையாபுரம், விஜய நாகையாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது தாயார் மீனாள், அவரது மகள் பிரியதர்ஷினி ஆகியோர் வழங்கினர்.

அதன்பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் சந்திக்கும் துயரங்கள் ஏராளம். அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில் தற்போது தினமும் கொள்ளை, கொலை அரங்கேறி கொண்டு இருக்கிறது. போதை பொருட்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். மதுவை ஒழிப்போம் என்று முழக்கமிட்ட தி.மு.க. இப்போது இலக்கு வைத்து மது விற்பனை செய்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், மோட்டார் சைக்கிள் மானியம், விலையில்லா லேப்டாப், அம்மா உணவகம் உள்பட பல்வேறு சமூக நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. பால் விலை, சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன.

தேர்தல் வாக்குறுதிகள்

தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, மது ஒழிப்பு, பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000, கல்வி கடன் ரத்து என ஏராளமான வாக்குறுதிகளை தந்த தி.மு.க. ஆட்சிக்கு வந்து 19 மாதங்கள் ஆகியும் இதுவரை நிறைவேற்ற வில்லை. இது குறித்து மக்கள் கேள்வி எழுப்பினால், அமைச்சர்கள் இழிவாக பேசுகிறார்கள். தி.மு.க. இந்த ஆண்டாவது இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

மதுரையில் நடைபெறும் 51 ஜோடிகளின் சமத்துவ சமுதாய திருமணத்தில் தான் எனது மகள் பிரியதர்ஷினி திருமணமும் நடக்கிறது. ஏன் உங்கள் மகள் திருமணத்தை தனியாக நடத்தவில்லை என்று பலரும் என்னிடம் கேட்கின்றனர். என்னை பொறுத்தவரை அரசியல் வாழ்வை நான் ஏற்று கொண்ட பிறகு கட்சியும், மக்களும் தான் எனது குடும்பம். நான் கட்சி வேறு, குடும்பம் வேறு என்று பிரித்து பார்த்ததில்லை. இதுவரை நான் நடத்திய அனைத்து கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகள் அனைத்தையும் குடும்ப நிகழ்ச்சியாக தான் நினைத்து நடத்தி இருக்கிறேன். இந்த சமுதாய சமத்துவ திருமணத்தில் எனது மகள் திருமணத்தையும் நடத்துவது தான் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

இது மிகப்பெரிய வரம். இந்த திருமணம், எனது ஏற்பாட்டில் நடந்தாலும் அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் தான் நடக்கிறது. இந்த திருமணத்திற்கு குழந்தைகள் தங்கள் சேமிப்பு பணத்தை தருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் நிதி உதவி செய்கின்றனர். பலரது பங்களிப்பால் எனது மனம் நெகிழ்கிறது. இது ஆடம்பர திருமணம் அல்ல. அன்பால், உணர்வால் அனைவரும் ஒன்று கூடி நடத்தப்படும் திருமணம். இது தான் அ.தி.மு.க.வின் பலம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்