உழைப்பாளர்களுக்கு துரோகம் செய்ததால் தி.மு.க. அரசு திக்குமுக்காடி வருகிறது- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

உழைப்பாளர்களுக்கு துரோகம் செய்ததால் தி.மு.க. அரசு திக்குமுக்காடி வருகிறது என்று செல்லூர் ராஜூ பேசினார்.

Update: 2023-05-01 21:01 GMT


உழைப்பாளர்களுக்கு துரோகம் செய்ததால் தி.மு.க. அரசு திக்குமுக்காடி வருகிறது என்று செல்லூர் ராஜூ பேசினார்.

பொதுக்கூட்டம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுபடி, மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின பொதுக்கூட்டம், பெத்தானியபுரம் எம்.ஜி.ஆர். திடலில் நேற்று நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளரும், மத்திய 7-ம் பகுதி செயலாளருமான சக்தி விநாயகர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தில்லுமுல்லு செய்துதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இப்போது திக்குமுக்காடி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு பேச்சு, இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை செய்யும் போதே பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். உடல் ரீதியாக பாதிப்பு அடைகின்றனர். உழைப்பவர்களுக்குதான் கஷ்டம் தெரியும். ஆனால் இதனை 12 மணி நேரமாக உயர்த்தி உழைப்பாளர்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க. அரசு. ஆனால் எங்களின் போராட்ட அறிவிப்பு காரணமாக தற்போது அந்த அறிவிப்பை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்.

மக்களை ஏமாற்றி விடலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் அதில் ஏமாற போவது மக்கள் அல்ல. முதல்-அமைச்சர் தான். கடந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள் ரூ.25 கோடி வாங்கிக்கொண்டு தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டார்கள். வருகிற தேர்தலில் அவர்கள் ரூ.50 கோடி வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். ஏனென்றால் தி.மு.க. 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளையடித்து இருப்பதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் கூறி இருக்கிறார். அவர் உண்மையை சொல்லி இருப்பதால் அவரை பாராட்டுகிறேன். ஆனால் இதே நிதி அமைச்சர் மதுரைக்கு ஒரு திட்டத்திற்கு கூட ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. ஆனால் சென்னை, கோவைக்கு சிறப்பு நிதி ஒதுக்கி இருக்கிறார்.

கடலில் பேனா

தமிழகத்தில் 7 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தை நிறுத்தி இருக்கிறார்கள். பஸ்சில் செல்லும் பெண்களை, ஓசி பஸ் பயணம் என்று வாய் கொழுப்புடன் தி.மு.க.வினர் பேசுகிறார்கள். கடலில் பேனா வைத்தால்தான் கருணாநிதியின் புகழ் தெரியுமா?. அவரது புகழ் என்னவென்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். தனது குடும்பத்தை செல்வ செழிப்புடன் வைத்ததுதான் கருணாநிதியின் சாதனை.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மது ஒழிப்பு என்று கூறி விட்டு ஆட்சிக்கு வந்தவுடன், மதுவை ஆறாக ஓட விடுகிறார்கள். தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள், தி.மு.க. ஆட்சி மிக மோசம் என்று உணர்ந்து விட்டார்கள். தமிழக அரசு மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்க மறுக்கிறது. நானும் பல முறை கோரிக்கை வைத்து விட்டேன். ஆனால் தமிழக அரசு செவி சாய்க்க வில்லை. என்னிடம் எடப்பாடி பழனிசாமி, "கவலைப்படாதீர்கள் ராஜூ, இன்னும் 2 ஆண்டுகளில் நாம் ஆட்சிக்கு வந்து விடுவோம். அப்போது மூக்கையா தேவருக்கு மணி மண்டபம் மிக பிரமாண்டமாக கட்டி விடுவோம் என்றார். இந்த தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் தான் உண்டு. மக்களை ஏமாற்றுகிற இந்த ஆட்சிக்கு, பொதுமக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்