சிறுபான்மையினர் நலனில் தி.மு.க. அரசு முன்னோடியாக உள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வாழ்நாள் அங்கீகாரம் விரைவில் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Update: 2024-02-17 08:28 GMT

சென்னை,

சிறுபான்மை நலத்துறை ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;

"எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுவது நகைப்பை ஏற்படுத்துகிறது. சிறுபான்மையினர் நலனை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் திராவிட மாடல் அரசு முன்னோடி அரசாக உள்ளது. 

பள்ளிவாசல், தர்காக்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது. உலமா ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செல்வோருக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 18 சிறுபான்மையினர் நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றியது திராவிட மாடல் அரசு. உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.5.46 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வாழ்நாள் அங்கீகாரம் விரைவில் வழங்கப்படும்.

2022-23-ம் ஆண்டு முதல் 1 முதல் 8 வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையினை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இதனை மீண்டும் வழங்கவேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த திட்டம் நிறுத்தப்பட்டதன் காரணமாக தமிழ்நாட்டில் ஏழை சிறுபான்மை மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்ட கல்வி உதவித்தொகையினை 1 முதல் 8 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை மாணவிகளுக்கு தமிழக அரசு நிதியோடு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மொழியால் தமிழர் என்ற ஒற்றுமை உணர்வோடு ஒற்றுமையாக வாழ்ந்து மாநிலத்தையும் வளர்த்து இந்திய நாட்டையும் செழிக்க வைப்போம்." இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்