தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல் அடக்கம்
தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல் அடக்கம்;
தஞ்சையில் மாரடைப்பால் மரணம் அடைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிஊர்வலத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் அமைச்சர் மரணம்
தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே கல்லுக்குளம் சாலையில் வசித்து வந்தவர் எஸ்.என்.எம். உபயதுல்லா (வயது82). முன்னாள் அமைச்சரான இவர் தி.மு.க. மாநில வர்த்தக அணி தலைவராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த சகோதரியின் பேரன் திருமணத்தில் பங்கேற்க உபயதுல்லா தனது வீட்டில் இருந்து நேற்றுமுன்தினம் காலை புறப்பட்டார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். உபயதுல்லாவின் உடல் கல்லுக்குளம் சாலையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் ஆர்வலர்கள் ஏராளமானோர் வந்து உபயதுல்லா உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
டி.ஆர்.பாலு-எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., செ.ராமலிங்கம் எம்.பி., மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி.முத்துமாணிக்கம், தி.மு.க. தலைமை நிலையத்தை சேர்ந்த துறைமுகம் காஜா, பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ. அசோக்குமார், மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் உள்ளிட்டோர் உபயதுல்லா உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டது. மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகர பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, முரசொலி, செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் ஊர்வலமாக சென்று உபயதுல்லா உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பள்ளிவாசலில் அடக்கம்
பின்னர் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கல்லுக்குளம் சாலையில் உள்ள வீட்டில் இருந்து உபயதுல்லா உடல் இஸ்லாமிய முறைப்படி தஞ்சை காந்திஜிசாலையில் புதுஆற்றுப்பாலம் அருகே உள்ள ஜும்மா பள்ளிவாசலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு தொழுகை, இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் செய்து, உபயதுல்லா உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதிஊர்வலத்தில் தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், பிற கட்சியினர், தமிழ் ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.