தி.மு.க. பெண் கவுன்சிலர் கொடூர கொலை

கரூர் அருகே தி.மு.க. பெண் கவுன்சிலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் காட்டுப்பகுதியில் வீசப்பட்ட அவரது உடலை போலீசார் மீட்டனர்.

Update: 2023-09-26 19:37 GMT

பெண் கவுன்சிலர்

ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 57). இவர் அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரூபா (42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரூபா, சென்னசமுத்திரம் பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலராக பணியாற்றி வந்தார்.

கரூர் மாநகர பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபா வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கரூர் வந்த ரூபா அன்று இரவு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ரூபாவை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் பற்றி எந்த தகவலும் இல்லை.

பிணமாக மீட்பு

இந்த நிலையில் நேற்று மதியம் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தலை நசுங்கிய நிலையில் பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் போலீஸ் மோப்பநாயும் கொண்டுவரப்பட்டது. அது பெண் பிணமாக கிடந்த பகுதியில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொடூர கொலை

விசாரணையில், இறந்து கிடந்தது ஈரோட்டை சேர்ந்த பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலரான ரூபா என்பது தெரியவந்தது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. ரூபாவின் தலை நசுங்கி உள்ளதால் அவரை மர்ம ஆசாமிகள் கொடூரமாக கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

மேலும் அவரை மர்ம நபர்கள் வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இங்கு உடலை வீசிச்சென்றார்களா? அல்லது கடத்தி கொண்டுவந்து கொலை செய்து போட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்