தி.மு.க. செயற்குழு கூட்டம்
திருப்பத்தூா் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஜோலார்பேட்டையில் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் தலைமை தாங்கினார். அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில செயலாளர் டி.செங்குட்டுவன், சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் இ.ஜி.சுகவனம், எம்.எல்.ஏ.க்கள் அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் க.தேவராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அப்போது டிசம்பர் மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டிலும், 14-ந்தேதி சென்னையில் நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டிலும் கலந்து கொள்வது, வாக்குச்சாவடி முகவர்கள் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து பேசினார்.
தொகுதி பார்வையாளர்கள் செங்குட்டுவன், சுகவனம் ஆகியோர் தேர்தல் பணிகள் குறித்து பேசினர். இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்கும் இளைஞர்களுக்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளிடம் மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் வழங்கினர்.
கூட்டத்தில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல் நன்றி தெரிவித்தார்.