தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

14 மாத கால தி.மு.க.ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது என வாலாஜா டோல்கேட் அருகே நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கு்றம் சாட்டினார்.

Update: 2022-08-09 18:04 GMT

காவேரிப்பாக்கம்,

14 மாத கால தி.மு.க.ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது என வாலாஜா டோல்கேட் அருகே நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கு்றம் சாட்டினார்.

வரவேற்பு

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் சேலம் சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேலூர் வழியாக சென்னைக்கு திரும்பினார். அவருக்கு வாலாஜா டோல்கேட்டில் ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் எதிர்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க. கொக்கலி ஆட்டம் ஆடியபடி பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டம் உருவானதற்கு காரணம் அ.தி.மு.க. அரசுதான். தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்ற 14 மாத காலத்தில் நாட்டு மக்களுக்காக எதையாவது செய்திருக்கிறார்களா? ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு என்று ஏதாவது திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்களா?

விலைவாசி உயர்ந்து விட்டது

இந்த 14 மாதங்களில் விலைவாசி உயர்ந்து விட்டது. மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். வீட்டு வரியையும் உயர்த்தி விட்டார்கள்.ஆட்சிக்கு வந்தால் நிறைய திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். 14 மாதத்தில் முதியோர்கள் வாங்கிய பென்ஷன் திட்டத்தை நிறுத்தியது தான் சாதனை. மேலும் எங்கு பார்த்தாலும் போதை பொருள். இளைஞர்கள், மாணவர்கள் இன்றைக்கு போதைக்கு அடிமையாக்கிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

சூதாட்டத்துக்கு கருத்து கேட்பு

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மக்களிடத்தில் கருத்து கேட்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். யாராவது சூதாட்டத்திற்கு கருத்து கேட்பார்களா?

எதிர்காலத்தில் ஒரு நல்லாட்சி மலர, எழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்ய, அனைத்து திட்டங்களும் நிறைவேற மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர உங்களுடைய ஒத்துழைப்பு தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்