தி.மு.க. பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றிபெற்றது எடப்பாடி பழனிசாமி பேச்சு

தி.மு.க. பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்றது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2022-06-17 20:56 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் போளூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்க அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்.

அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியான காட்டாம்பூண்டி கிராமத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அவர் அங்கு கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பொய்யான வாக்குறுதி

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தி.மு.க. பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது. அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் இதுவரை ஒன்றை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்கள் மருத்துவப்படிப்பு படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தரப்பட்டது. ஆனால் கல்வி கடனை ரத்து செய்வதாக தேர்தலின்போது தி.மு.க. அறிவித்தது. ஆனால் இதுவரை கல்விக் கடனை ரத்து செய்யவில்லை.

இரட்டை வேடம் போடும் கட்சி

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்தனர். அதற்கு கடந்த 1 வருடமாக ஆய்வு செய்து வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் மீண்டும் வழங்குவதாக அறிவித்தனர். ஆனால் அதுவும் வழங்கப்படவில்லை. மாணவர்கள் முதல் அரசு அலுவலர்கள் வரை அனைவரையும் தி.மு.க.வினர் ஏமாற்றி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்கிறேன் என்று கூறிய தி.மு.க. அரசு பெட்ரோலுக்கு மட்டும் பெயரளவுக்கு ரூ.3 மட்டும் குறைத்து விட்டு மக்களை ஏமாற்றி வருகிறது. தேர்தலின்போது ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என்று இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி தி.மு.க. தான். தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை அ.தி.மு.க. அரசு தான் கொடுத்தது.

அ.தி.மு.க. சார்பில் போராட்டம்

முதியவர்களுக்கு உதவித்தொகை ரூ.1000-த்தில் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தலின்போது தி.மு.க. தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது முதியோர் உதவித்தொகை வழங்குவதை குறைத்து வருகிறது. இதனை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் முதியோர்களுக்கு உதவிதொகை வழங்கக் கோரி போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்