அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என கூறி திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு

அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என கூறி திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேர் வெளிநடப்பு செய்தனர். மேலும் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-31 18:45 GMT

திண்டிவனம், 

வெளிநடப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரமன்ற கூட்டம் அதன் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வை சேர்ந்த சதீஷ், புனிதா, அரும்பு, லட்சுமி பிரபா, பார்த்திபன், சுதா, சின்னசாமி, பாபு, ரேணுகா, சுதாகர், சரவணா, லதா, ரேகா உள்ளிட்ட அதிருப்தி கவுன்சிலர்கள் 13 பேர் தங்கள் வார்டுகளில் கடந்த 1½ ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என கூறி வெளிநடப்பு செய்தனர்.

மேலும் 13 கவுன்சிலர்களும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவருடைய வழிகாட்டுதல்படி செயல்படுவோம். இல்லையென்றால் நாங்கள் 13 பேரும் ராஜினாமா செய்வோம் என நிருபர்களுக்கு பேட்டியளித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ராஜினாமா

அப்போது 1-வது வார்டு கவுன்சிலர் சதீஷ் கூறுகையில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற என்னை ஊக்குவிக்காமல் அமைச்சர் செஞ்சி மஸ்தான், ராஜினாமா செய்துவிடு என என்னிடம் கூறுகிறார். இது என்னை ராஜினாமா செய்ய தூண்டியுள்ளது. மேலும் நான் உள்ளிட்ட 13 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்ய உள்ளோம் என்றார்.

கூட்டத்துக்கு வாயில் கருப்பு துணி கட்டி வந்திருந்த 7-வது வார்டு கவுன்சிலர் புனிதா, கோரிக்கை குறித்து 18 மாதங்களாக நகர மன்றத்தில் பேசியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரி வசூல் செய்த ரூ.9 கோடியில் வார்டுகளுக்கு தலா ரூ.2 லட்சத்துக்காவது பணிகளை ஒதுக்கிருக்கலாம் என்றார்.

இதனிடையே சிறிது நேரத்தில் நகரமன்ற கூட்டம் முடிந்தது.

ஆட்சிக்கு அவப்பெயர்

இதையடுத்து நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், திண்டிவனம் நகராட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், 13 கவுன்சிலர்கள் திராவிட மாடல் ஆட்சிக்கும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் வெளிநடப்பு செய்துள்ளனர் என்றார். இதே கருத்துகளை துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், நகர மன்ற தலைவரின் கணவரும், கவுன்சிலருமான ரவிச்சந்திரன் ஆகியோரும் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்