தி.மு.க. கவுன்சிலர்கள் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஒப்பந்த விவகாரத்தில், விடுதியில் ஒப்பந்ததாரரை சந்தித்ததாக தி.மு.க. கவுன்சிலர்கள் மீது காங்கிரஸ் கவுன்சிலர் குற்றம்சாட்டியதால் கூடலூர் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
ஒப்பந்த விவகாரத்தில், விடுதியில் ஒப்பந்ததாரரை சந்தித்ததாக தி.மு.க. கவுன்சிலர்கள் மீது காங்கிரஸ் கவுன்சிலர் குற்றம்சாட்டியதால் கூடலூர் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் பிரச்சினை
கூடலூர் நகராட்சி மன்ற கூட்டம் அலுவலகத்தில் உள்ள மன்ற அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், துணைத்தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு விவாதம் நடந்தது.
கவுன்சிலர் வெண்ணிலா:- அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.
கவுன்சிலர் சையத் அனூப்:- கூடலூர் நகருக்குள் சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. இதை தடுக்க முயற்சிக்கும் அலுவலர்களை சம்பந்தப்பட்டவர்கள் அவதூறாக பேசுகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒப்பந்ததாரருடன் சந்திப்பு
கவுன்சிலர் (காங்கிரஸ்) உஸ்மான்:- நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பணம் செலுத்துவதில்லை. இதனால் நகராட்சி பணம் ஒப்பந்ததாரருக்கு வழங்கக்கூடாது என ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மீண்டும் ஒப்பந்தம் வழங்க முயற்சி நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க.வை சேர்ந்த ஒப்பந்ததாரரை சில தி.மு.க. கவுன்சிலர்கள் தனியார் தங்கும் விடுதியில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. பின்னர் நகராட்சி தலைவர் பரிமளா அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
நிதி ஒதுக்கக்கூடாது
தொடர்ந்து பேசிய கவுன்சிலர் உஸ்மான், தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பண பலன்கள் வழங்காததால் ஒப்பந்ததாரருக்கு நிதி ஒதுக்கக்கூடாது என ஏற்கனவே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி தற்போது கொண்டு வரப்பட்ட தீர்மான எண்.1, 31-ஐ அங்கீகரிக்கக் கூடாது என்றார்.
தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.