தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் உண்மையை கண்டறியும் சோதனை நடத்துங்கள்: ஆர்.பி. உதயகுமார் பேச்சு

தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் உண்மையை கண்டறியும் சோதனை நடத்துங்கள் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சகர் ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2022-09-10 03:25 GMT

மதுரை,

தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் தியானேஷ்-ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரின் திருமணம் மதுரை கலைஞர் அரங்கத்தில் நடந்தது. இதில், முன்னிலை வகித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமண நிகழ்வை நடத்தி வைத்து உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ, அதைவிட இப்போது நம்பிக்கையாக இருக்கிறார்கள். பல மடங்கு அசைக்க முடியாத நம்பிக்கை நம் மீது ஏற்பட்டிருக்கிறது. இனி எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் தான் வெற்றிபெறப்போகிறோம் என்ற நம்பிக்கை நம்மைவிட மக்களுக்கு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு உதாரணமாக, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், அதுவும் ஒரு சாட்சியாக அமைந்தது என கூறினார்.

இதன்பின் தொடர்ந்து அவர், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அவரிடம் இருக்கும் எம்.எல்.ஏ.வே அவரிடம் பேசுவதில்லை. எங்கள் (தி.மு.க.) எம்.எல்.ஏ. வந்து பேசுகிறார்கள் என்று அவர் 'புரூடா' விட்டுக்கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, சட்டமன்ற தேர்தலில் தோல்வி, உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி. அ.தி.மு.க கட்சி இப்போது பிளவுபட்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி என்று 2 அணிகளாக பிளவுபட்டிருக்கிறது. இப்ப அவர் (எடப்பாடி பழனிசாமி) இருக்கும் பதவியே 'டெம்ப்ரவரி' (தற்காலிகமானது) பதவி. இந்த 'டெம்ப்ரவரி' பதவியை வைத்துக்கொண்டு இன்னொரு கட்சியை விமர்சிக்க அவருக்கு தகுதி இருக்கிறதா? நானும் இந்த நாட்டில் இருக்கேன் என்று காட்டிக்கொள்வதற்காகதான், காமெடி கதையை எல்லாம் விட்டுக்கொண்டிருக்கிறார் என கூறினார்.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் உண்மையை கண்டறியும் சோதனை நடத்துங்கள். அப்படி நடத்தினால், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியே முதல்-அமைச்சராக தொடர வேண்டும் என விரும்புவது தெரியும். தன் நிலை மறந்து முதல்-அமைச்சர் வசைபாடியிருப்பது அந்த பதவிக்கு அழகல்ல என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்