தமிழக கவர்னரை கண்டித்து சேலத்தில் தி.மு.க. கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்-உருவ பொம்மையை எரிக்க முயன்ற 8 பேர் கைது

தமிழக கவர்னரை கண்டித்து சேலத்தில் தி.மு.க. கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-10 21:17 GMT

ஆர்ப்பாட்டம்

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் கூட்டம் முடியும் முன்பே கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறியதை கண்டித்து நேற்று மாலை தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.

இதில் சட்டசபை மரபுகளை மீறி செயல்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

உருவ பொம்மை எரிக்க முயற்சி

ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது சிலர் கவர்னர் ஆர்.என்.ரவியின் உருவ பொம்மையை எரிப்பதற்காக கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானா பகுதிக்கு கொண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவர்களை கவர்னரின் உருவபொம்மையை எரிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்து சேலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்