சாமியார் உருவபடத்தை எரித்த தி.மு.க.வினர்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்த சாமியார் உருவப்படத்தை தி.மு.க.வினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கருங்கல்,
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்த சாமியார் உருவப்படத்தை தி.மு.க.வினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சனாதனத்தை ஒழித்துக் கட்டுவேன் என கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா எச்சரிக்கை விடுத்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கருங்கல் தபால் நிலையம் முன்பு சாமியார் பரமஹம்ச ஆச்சார்யாவை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
உருவப்படம் எரிப்பு
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் மரிய சிசு குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் ததேயு பிரேம்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ராஜன், கோபால், சத்யராஜ், மாஸ்டர் மோகன், மாவட்ட மகளிர் அணி தலைவர் கிளாடிஸ் லில்லி, அரசு வக்கீல் ஜெபஜாண், அம்சி நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது சாமியாரின் உருவப்படம் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்று கருங்கல் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் புகார் மனுவை இடது கையால் வாங்கியதாக தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.வினர் சப்-இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசில் புகார்
இதேபோல் குளச்சல், வடசேரி போலீஸ் நிலையத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றியச் செயலாளர் பாபு தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது.அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மற்றும் பலர் உடனிருந்தனர்.