தி.மு.க.வையும், வி.சி.க.வையும் பா.ஜ.க. பிரிக்க முயற்சி செய்கிறது

தி.மு.க.வையும், வி.சி.க. வையும் பா.ஜ.க. பிரிக்க முயற்சி செய்கிறது என்று தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-14 18:45 GMT

கள்ளக்குறிச்சியில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்துக்களுக்கான கட்சி என்று சொல்ல கூடிய பா.ஜ.க.விற்கு எதிராக இந்துக்கள் தான் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி, நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். சட்ட ரீதியாக மதுபான கடைகள் இயங்கி வரும் நிலையில் விஷசாராயம் குடித்து உயிரிழக்கும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொருத்தவரை முழு மதுவிலக்கு என்பதே கொள்கை. ஆனால் நடைமுறை சாத்திய கூறுகளால் அது முடியவில்லை. மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தப்படும் என தி.மு.க. கூறியதை இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறேன்.

பிரிக்க நினைப்பது நடக்காது

பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் இலவு காத்த கிளி போன்று தி.மு.க.வையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் பிரிப்பதற்கு முயற்சிகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்காலிகமாக கூட பா.ஜ.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம். தி.மு.க.வையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் பிரிக்க நினைப்பது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் தனபால், துணை செயலாளர் ராமமூர்த்தி உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்