தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி உறுதி; திருமாவளவன் எம்.பி. பேட்டி
தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி உறுதி என்று திருமாவளவன் எம்.பி. கூறினார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதிக்கு நேற்று வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. அ.தி.மு.க.வில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் பா.ஜ.க. தேர்தலில் போட்டியிடுவதா?, அ.தி.மு.க.விற்கு ஆதரவளிப்பதா? அல்லது தேர்தலை தவிர்ப்பதா? என உறுதியாக தெரியாத நிலையிலும் உள்ளது. பா.ம.க. தேர்தலில் இருந்து விலகிக்கொண்டது. இதன் மூலம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலையில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
இந்தியாவை வல்லரசாக்குகிறோம் என்று பா.ஜ.க. கூறி வருகிறது. ஆனால் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு ஆகியவை தொடர்ந்து வருகிறது. நாட்டை வல்லரசாக்குவதற்கு பதிலாக மக்களிடையே சாதி, மதத்தின் பெயரால் வெறுப்பை ஏற்படுத்தி, மக்களுக்கு இடையே இடைவெளியை ஏற்படுத்துவதே பா.ஜ.க. முக்கிய கடமையாக செய்து வருகிறது. தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், எதிர்பார்க்கும் அளவிற்கு சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை. நாட்டில் பா.ஜ.க.வால் முன்னெடுக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம். நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.