தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்
தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்
நாகை நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நகராட்சி கூட்டம்
நாகை நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மாரிமுத்து தலைமையில் நேற்று நடந்தது. ஆணையர் ஸ்ரீதேவி, பொறியாளர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசினர்.
இதன் விவரம் வருமாறு:-
செந்தில்குமார்(தி.மு.க.): நாகூரில் கந்தூரி விழாவையொட்டி சாலைகளை சரிசெய்ய குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை வைத்து 11 தெரு சாலைகளை சரி செய்ய முடியாது. நகராட்சி கவுன்சிலர்கள் கூறும் பணிகளை மேற்கொள்வதில் தாமதப்படுத்த கூடாது.
ஆணையர்: நகராட்சி வருவாயை பெருக்க கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சியில் ரூ.20 கோடி வரை வரி பாக்கி நிலுவையில் உள்ளது. எனவே வருவாயை பெருக்க கவுன்சிலர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
தலைவர்:- நகராட்சி அதிகாரிகளின் வேலையை கவுன்சிலர்களிடம் வழங்கக்கூடாது. கால அவகாசம் தான் கேட்பார்களை தவிர, வரி கட்ட வேண்டாம் என்று யாரும் சொல்லமாட்டார்கள். வரி வசூலுக்கு கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
வாக்குவாதம்
கவிதா கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.):- எனது வார்டில் குப்பைகள் அள்ளுவதில்லை. கூடுதலாக குப்பை வண்டிகளை வாங்க வேண்டும். அதேபோல் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொறியாளர்:- நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பழைய குடிநீர் குழாய்களுக்கு பதிலாக புதிதாக குழாய்கள் பதிக்கப்பட உள்ளது. டெண்டரும் விடப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் முழுமையாக தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிடும்.
அனைத்து வார்டுகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படுகிறது. தேவை இல்லாமல் குறை கூற வேண்டாம். சொந்த பிரச்சினையை பேச வேண்டாம் என தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் கூறினார். இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஒவ்வொன்றாக சரிசெய்து வருகிறோம்
பரணிகுமார் (அ.தி.மு.க.):- 36 வார்டுகளின் குப்பைகளும் ஒரே வார்டு பகுதியில் கொட்டப்படுகிறது. குப்பை எரிந்து பொதுமக்கள் கடுமையாக பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.
தலைவர்:- கடந்த 10 ஆண்டு களாக மேற்கொள்ளப்படாத பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம். 10 குப்பை வண்டிகள் வாங்கப்பட உள்ளது,
பதுர்நிஷா (தி.மு.க.):- கந்தூரி விழாவையொட்டி சாலைகளை மேம்படுத்துவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகூர் ெரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் மின்விளக்கு மற்றும் குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.