தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகிவிட்டதாக அ.தி.மு.க. சார்பில் திருப்பூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசினார்.
மக்கள் தயாராகிவிட்டார்கள்
மின் கட்டணம், சொத்துவரி, குப்பை வரி, குடிநீர் வரி உயர்வு மற்றும் நூல் விலை உயர்வால் தொழில் பாதிப்பு, மின் கட்டண உயர்வால் பனியன் தொழில் முடக்கம் ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 50 வார்டுகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் 44-வது வட்ட கிளை சார்பில் டூம் லைட் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கவுன்சிலர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் வரி உயர்வால் மக்கள் கொதித்துப்போய் உள்ளனர். மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. தொழில் செய்ய முடியாமல் திருப்பூர் மாநகர மக்கள் தவிக்கிறார்கள். அரசு மருத்துவக்கல்லூரியை திருப்பூருக்கு கொண்டு வந்த அரசு அ.தி.மு.க. அரசு.
மக்களின் நலனுக்காக வரி உயர்வு செய்யாமல் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. பொய் வாக்குறுதியை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசுக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா பேரவை மாநில இணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.