தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி என கூறி 68 சதவீத பெண்களை ஏமாற்றி விட்டனர் -அண்ணாமலை
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி என கூறி 68 சதவீத பெண்களை ஏமாற்றி விட்டனர் என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
மதுரை,
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற முழக்கத்தோடு பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று காலை திருப்பரங்குன்றம் திருநகர் 2-வது பஸ் நிறுத்தத்தில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து இந்த பாத யாத்திரை தொடங்கியது.
பின்னர் அவர் பாண்டியன் நகர், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம் ரெயில்வே மேம்பாலம், திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோடு, திருப்பரங்குன்றம் சன்னதி வழியாக 16 கால் மண்டபம் வரை பாதயாத்திரையாக வந்தார். திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி கும்பிட்டார்.
அதன் பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
ஊழலில் முதல் மாநிலம்
கடன் வாங்குவதில் இந்தியாவில், தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தில் தி.மு.க. ஆட்சியை நடத்துகிறது. 5500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. 18 வயதில் இருந்து 60 வரை உள்ளவர்களில் 18 சதவீதம் ஆண்கள் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். மது இல்லாமல் தமிழகத்தை நடத்த முடியாத நிலை உள்ளது. கடன் வாங்குவது. மது விற்பனை மற்றும் ஊழல் என அனைத்திலும் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது.
பிரதமர் மோடி ஆட்சியில்தான் 17 லட்சத்திற்கு மேற்பட்ட பெண்கள் தொழில் முனைவோராக உள்ளனர். காவிரி தண்ணீர் வரவில்லை என தி.மு.க.வினர் யாராவது குரல் கொடுத்தார்களா.? முதல்-அமைச்சர் பெங்களூரு சென்ற போது நாங்கள் கூறியதை கேட்காமல் இன்றைக்கு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, காவிரி தண்ணீைர திறந்து விடச்சொல்கிறார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நகை கடன் தள்ளுபடி என கூறி 68 சதவீதம் பெண்களை ஏமாற்றி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமங்கலம்
இதனை தொடர்ந்து அண்ணாமலை மதுரை திருமங்கலம் மறவன்குளம் பகுதியிலிருந்து பஸ் நிலையம் வரை பாதயாத்திரை சென்றார். பின்னர் அவர் பஸ் நிலையம் அருகே பேசியதாவது:-
திருமங்கலத்திற்கு திருமங்கலம் பார்முலா என்ற பெயர் உள்ளது. திருமங்கலம், அரவக்குறிச்சி போன்றவை கரும்புள்ளியாக உள்ளது. திருமங்கலம் பார்முலா இந்தியா முழுவதும் பரவி உள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்றால் திருமங்கலத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும்.
திருமங்கலத்தில் பல்லாண்டு காலமாக பிரச்சினையாக இருப்பது கப்பலூர் சுங்கசாவடி. விதிமுறைக்கு முரண்பாடாக இருந்தால் இந்த சுங்கச்சாவடியை எடுப்பதற்கு முயற்சி செய்வேன் என்றார்.
இதனை தொடர்ந்து அண்ணாமலை அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.