தி.மு.க. மூத்த நிர்வாகிகள் 100 பேருக்கு பொற்கிழி

தி.மு.க. மூத்த நிர்வாகிகள் 100 பேருக்கு பொற்கிழியை ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்.

Update: 2023-07-03 20:01 GMT

நெல்லை மாநகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கட்சியின் 100 மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை தாங்கினார்.

நெல்லை மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஹெலன் டேவிட்சன், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் மாலைராஜா, மேயர் பி.எம்.சரவணன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு, மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேச்சாளர் சூர்யா வெற்றிகொண்டான் பேசினார்.

பின்னர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறுகையில், 'அரசியல் பூகம்பங்கள் வந்தாலும், எத்தனை மோடிகள் வந்தாலும், எத்தனை அண்ணாமலை வந்தாலும் அவர்களது திட்டங்களை தவிடு பொடியாக்கும் தொண்டர்கள் தி.மு.க.வில் உள்ளனர். தமிழக கவர்னர் தொடர்ந்து சனாதனம் குறித்து பேசி வருகிறார். தமிழகம் பெரியார் பிறந்த மண், அண்ணாவால் வளர்ந்த மண், கலைஞரால் பாதுகாக்கப்பட்ட மண், இங்கு சனாதனத்திற்கு கடுகளவும் இடம் கிடையாது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்