தேமுதிக எதற்கு தொடங்கப்பட்டதோ அதற்கான லட்சியத்தை விரைவில் அடையும் - பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்த் செய்த அனைத்து உதவிகளையும் தொடர்ந்து நாங்கள் செய்வோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு கட்சிக்கொடியை முழு கம்பத்தில் ஏற்ற வேண்டும் என முடிவு செய்து இன்று ஏற்றியுள்ளோம்.
தேமுதிக கட்சி கொடி ஏற்றும்போது கயிறு அரை கம்பத்தில் அறுந்து விழுந்த சம்பவத்தை தடைக்கு பின்னால் அமையும் வெற்றியாக பார்க்க வேண்டும்.
தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த் எந்த நோக்கத்திற்காக கட்சியை ஆரம்பித்தாரோ அந்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்ற பாடுபடுவோம். விஜயகாந்த் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளன.
வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் அறக்கட்டளை விரைவில் தொடங்குவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு யார் வேண்டுமானாலும் எப்போ வேண்டுமானாலும் வரலாம். அப்படி வருவோருக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.விஜயகாந்த் செய்த அனைத்து உதவிகளையும் தொடர்ந்து நாங்கள் செய்வோம். விஜயகாந்திற்கு பொது இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.