நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி?

நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து திருப்புவனத்தில் நடந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Update: 2023-10-06 18:45 GMT

திருப்புவனம்

முப்பெரும் விழா

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தே.மு.தி.க. முப்பெரும் விழா ெபாதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் காந்தி, செட்டி அம்பலம் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் அலாவுதீன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

இந்த திருப்புவனம் பகுதிக்கு நான் பலமுறை வந்துள்ளேன். சிவகங்கை மாவட்டம் என்றாலே வேலு நாச்சியார் பெயர் தான் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. அவருக்கு துணை நின்ற குயிலியும் போற்றப்படுகிறார்.

இந்த சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் 2 எம்.எல்.ஏ.க்கள் வரவேண்டும் என விரும்புகின்றேன்.

நலமாக இருக்கிறார்

தே.மு.தி.க. கட்சி ஆரம்பித்து 18 ஆண்டுகள் முடித்து 19-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. தே.மு.தி.க. பொதுக்கூட்டத்துக்கு இங்கு மாநாடு போல கூடியுள்ள கூட்டம். சோறு, பீர், சேலை, வண்டி வைத்து அழைத்து வரவில்லை. கேப்டன் என்ற மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு கூடிய கூட்டமாகும். ஆளும் கட்சி, ஆண்ட கட்சி கூட இந்த மாதிரி கூட்டத்தை கூட்ட முடியாது. கேப்டன் விஜயகாந்த் நல்லபடியாக உள்ளார்.

நான் திருப்புவனம் கூட்டத்திற்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு தான் வந்தேன். தற்போது நேரடி ஒளிபரப்பு மூலம் பார்த்துக் கொண்டிருப்பார். நாட்டு மக்களுக்காக உழைத்தவர் கேப்டன். ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே வந்து வழங்க வேண்டும் என கூறியவர்.

யாருடன் கூட்டணி?

தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதி 95 சதவீதம் நிறைவேற்றியதாக கூறுகிறார். 5 சதவீதம் நிறைவேற்றிவிட்டு 95 சதவீதம் நிறைவேற்றவில்லை என்பதுதான் உண்மை. கேப்டன் ஒருவர்தான் சாதி, மதம் இல்லை என்று கூறினார்.

சென்னையில் ஆசிரியர் போராட்டம் செய்த போது தே.மு.தி.க/ தான் முதன்முதலில் ஆதரவு தெரிவித்தது. தற்சமயம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பயங்கரமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலை கூட இல்லை. இங்குள்ள இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக கூறுகிறார்கள். இங்கு தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கிறதோ அந்த கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெறும். கூட்டணி குறித்து கேப்டன் முடிவு செய்து அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கழக துணைச்செயலாளர் பார்த்தசாரதி, உயர்மட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மகளிர் அணி துணை செயலாளர் அங்கையர்கண்ணி, மாவட்ட துணை செயலாளர் செல்லக் கண்ணன் உள்பட பலர் பேசினார்கள். இதில் சிவகங்கை நகர் செயலாளர் தர்மராஜ், ஒன்றிய அவைத்தலைவர் முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் ஞானமுத்து, மாயழகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்