பெருங்குடியில் தே.மு.தி.க. கொடியேற்று விழா

பெருங்குடியில் தே.மு.தி.க. கொடியேற்று விழாவில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

Update: 2023-08-21 05:57 GMT

சென்னையை அடுத்த பெருங்குடி கந்தன்சாவடி சந்திப்பில் தென் சென்னை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சி கொடி ஏற்று விழா நடந்தது. மாவட்ட செயலாளர் வேளச்சேரி பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

தி.மு.க. உண்ணவிரதம், அ.தி.மு.க. மாநாடு, அண்ணாமலை நடைபயணம் இவற்றால் மக்களுக்கு நல்லது நடந்தால் வரவேற்கத்தக்கது. என்றைக்கு கச்சத்தீவை மீட்டெடுக்கிறார்களோ அன்றைக்குதான் நமது மீனவர்களுக்கு நிச்சயமான வாழ்வாதாரம் கிடைக்கும். காங்கிரஸ்-தி.மு.க. கட்சிகள் கச்சத்தீவை தாரை வார்த்து தந்த வரலாறு இருக்கிறது.

தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் பணிகள் முடிந்து விட்டது. தேர்தல் நெருங்கும் போது யாருடன் கூட்டணி?, கூட்டணி இருக்கிறதா, இல்லையா? என்பதை தலைவர் அறிவிப்பார். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என ஏற்கனவே தெரிவித்து விட்டேன். வருங்காலத்தில் என்ன முடிவு? என்பது அறிவிக்கப்படும்.

விஜயகாந்த் நலமாக இருக்கிறார். பிறந்த நாள் அன்று தலைமை கழகத்தில் ஒட்டு மொத்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை, மக்களை சந்திக்க இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்