தீபாவளி பண்டிகை: விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு

தற்போது பெரும்பாலான மக்கள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள்.

Update: 2023-11-10 07:53 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்கள், பஸ்களில் டிக்கெட்கள் இல்லை. அரசு சிறப்பு பஸ்கள் அனைத்திலும், ஏற்கனவே பயணிகள் முன்பதிவு செய்து விட்டனர்.

தற்போது பெரும்பாலான மக்கள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். பயண நேரம் குறைவு என்பதால் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேற்று முதல் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, கோவை செல்லும் விமானங்களில் வழக்கத்தை விட பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அதைபோல விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளன. வழக்கமான கட்டணத்தை விட தற்போது 3 மடங்கு விமான கட்டணங்கள் உள்ளன. சென்னை-சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,390. ஆனால் இன்றும், நாளையும் இதன் கட்டணம் ரூ.11,504 ஆக உள்ளது.

இதேபோல் தூத்துக்குடி-ரூ.13,287, கோவை-ரூ.13,709, திருச்சி-ரூ.13,086, மதுரை-ரூ.13,415 ஆக உயர்ந்து உள்ளன.விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தாலும், சொந்த ஊரில் தங்கள் குடும்பத்தாருடன் தீபாவளி பண்டிகையை, கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் கட்டணத்தை பற்றி யோசிக்காமல், போட்டிப்போட்டுக் கொண்டு, விமான பயணம் செல்கின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில், பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்