தீபாவளி பண்டிகை: சென்னையில் 211 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் 211 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன.;
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்து 200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின்போது சேகரமாகும் பட்டாசு கழிவுகள் அபாயகரமான கழிவுகள் என்பதால் மாநகராட்சியின் சார்பில் இக்கழிவுகளை தனியாக சேகரித்து கும்மிடிபூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கூடுதலாக சேகரமாகும் பட்டாசு கழிவுகள் தூய்மைப்பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த 23-ந்தேதி 7.92 டன் பட்டாசு கழிவுகள், 24-ந்தேதி (தீபாவளியன்று) 63.76 டன் பட்டாசு கழிவுகள், 25-ந்தேதி (நேற்று) 139.4 டன் பட்டாசு கழிவுகள் என மொத்தம் 211.08 டன் பட்டாசு கழிவுகள் தூய்மைப்பணியாளர்கள் மூலம் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள பட்டாசு கழிவுகளை கொண்டு செல்ல மண்டலத்துக்கு 2 வாகனங்கள் என 30 தனி வாகனங்கள் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 50 டன் பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப் படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு உள்ளன. மீதமுள்ள பட்டாசு கழிவுகளை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.